;
Athirady Tamil News

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்

0

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி
இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிடப்பட்ட 2494/05 எனும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் கடமையாற்றும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை உயர்த்துவது, புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறானதொரு ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதால் அரச சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதில் அரச சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.