;
Athirady Tamil News

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

0
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு , மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் கள தரிசிப்பை மேற்கொண்டனர்.
கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பள்ளங்களுக்குள் , வலி தெற்கு பிரதேச சபையினர் இலத்திரனியல் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையாக கழிவுகளையும் கொட்டியுள்ளனர்.
இது குறித்து வலி. வடக்கு பிரதேச சபையின் 26 உறுப்பினர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் , வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ,  மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் . மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் என பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு அளித்துள்ளனர். அத்துடன் வலி. தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளி செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் வலி. தெற்கு பிரதேச சபையினர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு வந்து , கொட்டப்பட்ட குப்பைகளை குறித்த பள்ளங்களுக்குள் மேலும் தள்ளி விட முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் அறிந்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து , கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர , அவற்றை மேலும் பள்ளத்தினுள் தள்ளுவதில்லை என அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தி , அவர்களை திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பில் , சுற்றாடல் அதிகார சபையினருக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு அளித்த நிலையில் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள் கள தரிசிப்பினை மேற்கொண்டு , அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள் தொடர்பிலும் தமது அவதானத்தை செலுத்தினர்.
அங்கு காணப்பட்ட குப்பைகளை மீள அள்ளவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன் , தற்போதும் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையால் , அதனால் எழும் புகையினால் , அயலில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையான சுவாச நோய்கள் ஏற்பட ஏது நிலைமை உள்ளது என உறுப்பினர்களுக்கு தெரிவித்து , குறித்த விடயம் தொடர்பாக தாம் விரைவான நடவடிக்கையை மேற்கொள்வோம் என உறுதி அளித்து சென்றுள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.