இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ள போதிலும், நாட்டின் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை தொடர்கின்றன.
ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள்
தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இருப்பினும், தகுதியான தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தற்போது வேலையற்ற நபர்களிடம் குறிப்பிட்ட தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவாலை எதிர்கொள்ள வெளிநாட்டு ஊழியர்களை வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதுடன்,வெளிநாடு செல்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.