;
Athirady Tamil News

பரீட்சை முறைகேடு: அதிரடியாக கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட 461 அதிகாரிகள்

0

பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை பணிகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது முறையாகக் கருத்தில் கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சில அதிகாரிகளின் பெயர்கள் கடந்த நவம்பர் 21ஆம் திகதியுடன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியல்

எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இதனால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள் போலியான பரீட்சை பெறுபேறுகளை தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.