;
Athirady Tamil News

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு

0

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது,

அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.