;
Athirady Tamil News

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் கண் தொடர்பில் வெளியான கருத்தால் சர்ச்சை

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்ற வளாகத்தில் கடற்கொள்ளையர்களின் பாரம்பரிய உருவத்தைப் போன்று ஒரு கண்ணை மூடிய நிலையில் காணப்பட்டதாகத் ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்தார்.

கொழும்பு, பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று (07) புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மருத்துவ சிகிச்சை

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அவர் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று இலங்கைக்கு திரும்பியிருந்தார்.

அவரது கண் தொடர்பான சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாகக் கூறப்பட்ட போதிலும், இன்று நீதிமன்ற வளாகத்தில் அவர் கண்ணில் திடீரென ஒரு புதிய பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். கடற்கொள்ளையர்களின் பாரம்பரிய உருவத்தைப் போன்று ஒரு கண்ணை மூடிய நிலையில் அவர் காணப்பட்டார்.

ஷிரந்தி ராஜபக்‌ஷ சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் அவரை கைது செய்வதைத் தடுப்பதற்காக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.கடந்த 24ஆம் திகதி நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்ததாக அவர் தரப்பில் கூறப்பட்டது. தற்போது அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே, ஷிரந்தி ராஜபக்‌ஷ தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட ஒரு கோடி ரூபாய் நிதி மருத்துவமனைக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட நன்கொடை எனவும், அந்தப் பணம் இன்னமும் வங்கிக் கணக்கிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்கு உடலைப் பரிசோதிக்கும் இயந்திரமொன்றை வழங்குவதற்காக அந்த நிதி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சீனாவிலிருந்து ஏற்கனவே அவ்வாறான பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக மீண்டும் ஏன் நிதி பெறப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

இந்த விடயம் தொடர்பில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.