;
Athirady Tamil News

ஹெரோயினுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது- இரு உதவியாளர்களும் சிக்கினர்

0

அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம்  வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்   சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளதுடன்  கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் கல்முனை குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும்  கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  குறித்த சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதுடன் அவர்கள் வசம் இருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு  கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் ஆலோசனையிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். இப்னு அசாரின் வழிகாட்டலிலும்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக  தலைமையிலும் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். 

You might also like

Leave A Reply

Your email address will not be published.