;
Athirady Tamil News

மேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்; இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி

0

ரமல்லா,

மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை, மேற்கு கரை என இரு பகுதிகளாக உள்ளது. மேற்கு கரையின் பல பகுதிகளில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, காசா முனை, மேற்கு கரையில் ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்பட பல்வேறு ஆயுதக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களை இஸ்ரேல், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றன.

பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி

இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையின் ஹிப்ரோன் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கிகளுடன் காரில் வந்த 2 பயங்கரவாதிகள், இஸ்ரேலிய படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மேற்கு கரையின் எல்லைகளை இஸ்ரேல் மூடியுள்ளது. மேலும், மேற்கு கரையில் மிகப்பெரிய அளவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.