;
Athirady Tamil News

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவு இடைநீக்கம்

0

இலங்கையின் தேசிய மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, அதன் நிர்வாக அதிகாரியாக விளையாட்டு அமைச்சின் செயலாளரை நியமிக்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு, 1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின் கீழ், 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட 2511/21ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கும், விளையாட்டுச் சட்டத்திற்கு அமைவாக அதன் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட தேவையான மறுசீரமைப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்
இதன்படி, 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்தல், யாப்புத் திருத்தங்களைப் பூர்த்தி செய்தல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்துதல் ஆகிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட யாப்புக்கு அமைவாக வருடாந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் முறையாகத் தெரிவுசெய்யப்படும் வரை, அமைச்சின் செயலாளர் சங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பார் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.