இலங்கைக்கு வரும் 3 LP Gas கப்பல்கள்
எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கைக்கு மூன்று திரவப் பெற்றோலிய எரிவாயுக் (LP Gas) கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இரண்டு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், ஒரு கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கும் வருகை தரவுள்ளதாக LAUGFS எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய எரிவாயு விநியோகத் தடைகள் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் நிறுவனம், விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளது.