;
Athirady Tamil News

அரிசி வாங்கிச் சென்ற இளைஞரால் அம்பலமான மர்மம் ; இரண்டு மாதக் குழந்தையுடன் 15 வயது சிறுமி மீட்பு

0

இலங்கையின் நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீமுரே, கந்தகெட்டிய பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமி, சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியதுடன், உடுதும்புரை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

மேலதிக விசாரணை
இதனடிப்படையில், உடுதும்புரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மனவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் இருந்து தேவைக்கு அதிகமான அரிசியை தினமும் கொள்வனவு செய்து சென்ற இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த இளைஞரைத் தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் அரிசியுடன் ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிக்குச் செல்வதை அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் மூடப்பட்டிருந்த கல் குகையொன்றில் இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் சிறுமி ஒருவர் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதன்போது, ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 15 வயது சிறுமியே அவர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியும் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொலிஸ் விசாரணைகளின்போது, குழந்தை குறித்த கல் குகைக்குள்ளேயே பிரசவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலும், கிதுல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், வனப்பகுதியில் கிடைத்ததாகக் கூறப்படும் நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கிதுல் பாணி காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 36 வயதுடைய இளைஞரின் உறவினர் ஒருவரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மீட்கப்பட்ட சிறுமி மற்றும் இரண்டு மாதப் பெண் குழந்தை ஆகியோர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்புரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.