;
Athirady Tamil News

மாறும் கல்விச் சூழலில் வழிகாட்டியாக ஆசிரியர்கள்

0
இன்றைய அதிவேக தொழில்நுட்ப உலகிலும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழலிலும் நமது கல்வி முறை வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. முன்பு போல வகுப்பறையில் கரும்பலகையும் வெண்கட்டியும் மட்டுமே இருந்த காலம் மாறி, இப்போது கணினிகள், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் வந்துவிட்டன.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், இந்த மாற்றங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டுமல்லாமல், மாணவர்களின் மனநிலை மற்றும் சமூக எதிர்பார்ப்புகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

தகவல்கள் அனைத்தும் விரல் நுனியில் கிடைக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், எதையோ ஒன்றை மனனம் செய்து ஒப்புவிக்கும் பழைய கற்பித்தல் முறைகள் இனி பயனளிக்காது. மாறாக, மாணவர்களின் தேடல் திறனைத் தூண்டி, நல்லொழுக்கங்களை விதைத்து அவர்களைச் சமூகத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பு இன்று ஆசிரியர்களுக்கு உள்ளது.

கல்வி என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடியாகும். அந்த வகையில், இலங்கைக் கல்வியிலும் கடந்த காலங்களில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன.

முன்பெல்லாம் ஆசிரியர் சொல்வது மட்டுமே சட்டம் என்ற நிலை மாறி, இப்போது மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் முறைக்குக் கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் ஆசிரியர் என்பவர் வெறும் பாடம் சொல்பவராக மட்டும் இல்லாமல், மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், தோழமையாகவும், உளவியல் ஆலோசகராகவும் செயல்பட வேண்டியுள்ளார்.

நவீன கல்வி உளவியல் மற்றும் சமூக அறிவியல் உண்மைகளின் அடிப்படையில், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் முக்கிய சமூக முகவராக ஆசிரியர் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மறுபுறம் பாடங்களைக் கற்பிப்பதைத் தாண்டி, தேவையற்ற நிர்வாகப் பணிகள் மற்றும் ஆவணங்களை நிரப்பும் வேலைகளால் ஆசிரியர்களின் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதால், வகுப்பறையில் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதும் ஒழுக்கத்தைக் காப்பதும் ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக மாறி உள்ளது. அதோடு நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் குறைவான சமூக அந்தஸ்து போன்றவை ஆசிரியர்களின் மன உறுதியைப் பாதிக்கின்றன.

இவ்வாறான மாற்றங்களை இலங்கைக் கல்விச் சூழலில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பல நடைமுறைச் சவால்கள் உள்ளன. நகர்ப்புறப் பாடசாலைகளில் நவீன வசதிகள் கிடைத்தாலும், கிராமப்புறப் பாடசாலைகளில் இணைய வசதிகளோ டிஜிட்டல் கருவிகளோ முறையாகக் கிடைப்பதில்லை. இதனால் நகருக்கும் கிராமத்திற்கும் இடையே “டிஜிட்டல் இடைவெளி” உருவாகியுள்ளது. மேலும், புதிய தொழில்நுட்பங்களை வகுப்பறைகளில் பயன்படுத்துவதற்கான முறையான பயிற்சிகள் பல ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை.

இச்சவால்களால் ஒட்டுமொத்த கல்வி முறையிலும் எதிர்விளைவுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது. ஆசிரியர்கள், அளவுக்கு அதிகமான வேலைச்சுமையால் அவதிப்படும்போது, கற்பித்தல் செயல்முறை ஒரு இயந்திரத்தனமாக மாறிவிடுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கும் வசதியான நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையிலான கல்வித் தரம் மேலும் விலகிச் செல்கிறது.

பரீட்சை மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மாணவர்களின் உண்மையான ஆளுமை வளர்ச்சியும் விழுமிய கல்வியும் பின்தங்குகின்றன.

இந்நிலையை மாற்றி, புதிய கல்விச் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த சில முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு பாடத்திட்டங்களை உருவாக்கும் செய்முறைப் பயிற்சிகளை வழங்குதல், கற்பித்தலுக்காகப் பயன்படுத்தும் ஊடகங்களாகக் கணினி மற்றும் ஸ்மார்ட் போர்டுகள் தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

வருகைப் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் நேர விரயத்தைக் குறைத்து மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கலாம். அதேபோன்று தேவையற்ற ஆவணச் சுமையைக் குறைப்பதன் மூலமும் ஆசிரியர்களின் நேரத்தை மாணவர்களின் வழிகாட்டலுக்கும் கற்பித்தலுக்கும் முழுமையாக ஒதுக்க வழிவகை செய்ய முடியும். மாணவர்களின் நடத்தை மாற்றங்களையும் கல்வி சார்ந்த மன அழுத்தங்களையும் கண்டறிந்து கையாள்வதற்காக ஆசிரியர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தது இரண்டு முறை தொழிற்கல்வி பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். வகுப்பறை ஒழுக்கச் சீர்கேடுகளைத் தனியொரு ஆசிரியரால் மட்டும் கட்டுப்படுத்த இயலாது என்பதால், பெற்றோர், பாடசாலை நிர்வாகம் மற்றும் உள்ளூர் சமூகப் பெரியோர்களை உள்ளடக்கிய “ஒழுக்க மேலாண்மைக் குழுக்களை” அமைத்து மற்றவரோடும் கலந்தாலோசனைகள் நடத்துவதன் மூலம் கூட்டுப்பொறுப்பு முறையை உறுதிப்படுத்த முடியும்.

எத்தனை நவீன தொழில்நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களும் உருவாகினாலும், ஒரு மாணவனின் மனதைத் தொட்டு நல்வழிப்படுத்தும் ஆசிரியரின் இடத்தை எந்த ஒரு இயந்திரத்தாலும் ஈடுசெய்ய முடியாது. கல்வி என்பது தகவல்களை அளிப்பதுடன் நின்றுவிடாமல் மனித ஆளுமையைச் செதுக்கும் கலையாக இருப்பதால், புதிய டிஜிட்டல் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளையும் தொழில்முறை ஆதரவையும் வழங்குவது அவசியமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.