;
Athirady Tamil News

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

0

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் இன்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் வருமாறு:

மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டிருந்தது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு பதிவாகியுள்ளது:

விபத்து இடம்பெற்ற வெள்ளிக்கிழமையன்று (20) மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய துஷாந்த் என்ற இளைஞரே இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அவர்களின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சி அவர்களின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் ஆலோசனையின் கீழ் சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு இளம் உயிர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை மல்வத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.