;
Athirady Tamil News

‘சுயாதீன’ ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா? (கட்டுரை)

0

தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுமா என்ற சந்தேகம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தொடர்ச்சியாக, அரசாங்கம் ஏற்படுத்தி வரும் முட்டுக்கட்டைகளே அதற்குக் காரணமாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர, அரசாங்கம் ஆரம்பத்தில் முயன்றது. அவை பயனளிக்காது என்று நினைத்தோ என்னவோ, அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் பணிகளைக் குழப்பும் தந்திரங்களில் ஈடுபட்டது; ஈடுபட்டும் வருகிறது. அந்தத் தந்திரங்களில், ஜனநாயக விரோதமான மறைமுக வன்முறைகளும் அடங்குகின்றன.

அத்தோடு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர், தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, தேர்தல் நடத்துவதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், 1,000 கோடி ரூபாய் செலவழித்து, இந்தத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற அடிப்படையிலேயே அந்த இராணுவ அதிகாரி, வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தற்போதைய நிலையில், தேர்தலுக்கு பணம் வழங்குவது சவாலாக இருக்கிறது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நீதிமன்றத்துக்கு சத்தியக் கடுதாசி மூலம் அறிவித்துள்ளார்.

அவர் தேர்தலுக்கு பணம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில், அது மிகவும் சவாலான விடயம் என்றே கூறியிருக்கிறார். எனவே, உயர்நீதிமன்றம் இது தொடர்பாக என்ன முடிவு எடுக்கும் என்பதை முன்கூட்டியே கூற முடியாதிருக்கிறது. தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே, தேர்தல் நடத்துவதை இறுதியில் தீர்மானிக்கும் என்றுதான் தெரிகிறது.

அரசாங்கம், பல முக்கிய தேவைகளுக்காக பணம் இல்லாது தடுமாறுகிறது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன.

விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இது போன்றதொரு நிலையில் தேர்தலொன்று, அதுவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாத, மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு தேர்தலுக்கு 1,000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வியை பலர், குறிப்பாக ஆளும் கட்சியினர் எழுப்புகின்றனர்.

தற்போது நாட்டில், தமக்குச் சாதகமான நிலைமை இல்லை என்பதற்காகவே ஆளும் கட்சியினர் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால், நியாயமான அடிப்படையிலும் பலர் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். இது இரண்டு புறத்துக்கும் வாதிடக்கூடிய ஒரு விடயமாக உள்ளது.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலால், உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பது உண்மையே. ஆயினும், இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமிடலாம். 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலே அடித்தளமிட்டது. எனவே, இந்தத் தேர்தல் வேண்டுமா இல்லையா என்பது ஆட்சி மாற்றம் வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு சமமாகும். ஆனால், அந்த மாற்றத்துக்கு வித்திடக்கூடிய இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைப் பற்றிய இறுதித் தீர்வு நீதிமன்றித்திடமே இருக்கிறது.

நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும், தேர்தலை நிறுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், தேர்தல் ஆணைக்குழு எந்தளவு சுயாதீனமானது என்ற கேள்வியை எழுப்புகிறது. அண்மைக் காலத்தில் இந்தக் கேள்வி, ஏனைய சில ஆணைக்குழுக்கள் விடயத்திலும் எழுந்தது. குறிப்பாக, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் விடயத்திலும் இந்தச் சந்தேகம் எழுந்தது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைத் தமது அலுவலகத்துக்கு அழைத்து கலந்துரையாடினார். அப்போது அவர், தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைப் பற்றிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

ஆனால், அவ்வாறான கருத்து வேறுபாடுகள் இல்லை என ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ புஞ்சிஹேவா பின்னர் தெரிவித்திருந்தார். இது, அந்த உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறி, தேர்தலை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக கருதப்படுகிறது.

க.பொ.த உயர் தர பரீட்சை நடைபெறும் காலத்தில், தேர்தலை நடத்துவதைப் பற்றி பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடினீர்களா என்றும் அவர் அதே கூட்டத்தில் புஞ்சிஹேவாவிடம் கேட்டிருந்தார். இதுவும் தடையை ஏற்படுத்த எடுத்த, மற்றொரு முயற்சியாகும்.

தேர்தலொன்று அறிவிக்கப்பட்டு இருக்கும் காலத்தில், கட்சி ஒன்றின் தலைவரான ஜனாதிபதி, ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை இவ்வாறு அழைக்கலாமா என்ற கேள்வியை, அப்போது தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் எழுப்பியிருந்தன.

அதையடுத்து ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதைப் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

அத்தோடு, ஆணைக்குழுவின் மற்றோர் உறுப்பினரான பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஆணைக்குழுவிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

அதையடுத்து தேர்தல் ஆணைக்குழு பணப் பிரச்சினையை எதிர்நோக்கியது. இந்நிலையில், ஏனைய நிறுவனங்களிடம் கடன் பெறக்கூடாது என்று ஜனாதிபதி, அரச நிறுவனங்களுக்கு கட்டளை பிறப்பித்தார். இப்போது பணம் இல்லாமல் வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான எதையும் அச்சிட முடியாது என அரச அச்சகம், தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த வரவு – செலவு திட்டத்தில், ஆணைக்குழுவுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தும், ஆணைக்குழு நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. எனவே, தேர்தல் ஆணைக்குழு தமது சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது.

இதுபோன்றதொரு நிலையை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் எதிர்நோக்கி இருக்கிறது. மின்சாரக் கட்டனத்தை அதிகரிக்கக் கூடாது என்று அவ்வாணைக்குழுவின் தவிசாளர் ஜனக்க ரத்னாயக்க வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அரசாங்கம் அதை ஏற்கவில்லை. ஜனாதிபதியே இக்காரணத்துக்காக ரத்னாயக்கவை தனிப்பட்ட முறையில் சாடியிருந்தார். உலக சந்தையில் எரிபொருள் விலை புதிதாக அதிகரிக்கப்படாத நிலையில், தமது பழைய நட்டங்களுக்காக மின்சார சபை மின்கட்டனத்தை அதிகரிப்பது முறையாகாது என்பதே ரத்னாயக்கவின் வாதமாகும்.

க.பொ.த உயர் தர பரீட்சை நடைபெறும் காலத்தில், மின்வெட்டை தவிர்க்க வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்தது. ஆனால், மின்சார சபை அதைப் புறக்கணித்தது. அதையடுத்து, பரீட்சை காலத்தில் இடம்பெறும் மின்வெட்டை எதிர்த்து ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, மின்சார சபையால் புறக்கணிக்க முடியுமாக இருந்தால், அவ்வாணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக இருக்க முடியாது.

இந்த மின்வெட்டுப் பிரச்சினையைப் பற்றி கலந்துரையாட, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மின்சார சபை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியது.

மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தேவையான எரிபொருளை கடனுக்குப் பெற்று, பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதென்றும் எதிர்க்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் விலை ஏற்றத்தால், அந்தக் கடனை அடைப்பதென்றும் அந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த இணக்கத்ததை மின்சார சபை புறக்கணித்தது. பரீட்சைக் காலத்திலும் மின்வெட்டை தொடர்ந்தது. எனவே, மின்வெட்டானது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையிலான‘ ‘ஈகோ’ சண்டையைப்போல்த் தான் தெரிகிறது.

இந்த மின்வெட்டின் காரணமாக, மனித உரிமைகள் ஆணைக்குழு அவமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது. சட்டப்படி அத்தீர்ப்பு சரியானதாக இருக்கலாம். ஆனால், அங்கும் மின்சார சபை ஓர் ஆணைக்குழுவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை புறக்கணித்துள்ளது என்பது உண்மையாகும்.

2019ஆம் ஆண்டு, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்கும் போதும் சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தன. ஆயினும், கோட்டாபய பதவி ஏற்றவுடன் பொலிஸ் ஆணைக்குழு, இரகசிய பொலிஸின் பணிப்பாளராக இருந்த, ராஜபக்‌ஷர்கள் விரும்பாத ஷானி அபேசேகரவை, தென் மாகாணத்தில் உயர்பொலிஸ் அதிகாரியின் கீழ் பதவியொன்றுக்கு இடமாற்றம் செய்தது.

அதையடுத்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்‌ஷ, கடந்த நவம்பர் மாதம் நாடு திரும்பிய போது, பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளர் சந்திரா பெர்னாண்டோவும் மற்றோர் உறுப்பினரான எம்.பி பெரேராவும் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இவை அனைத்தும் சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.