;
Athirady Tamil News

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

0
சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார, உடல் மற்றும் உளவியல் ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உயர் தரத்திலான சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் பெப்ரவரி மாதம் 6 ஆம்,7 ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் முதியவராகும் வரை அரசாங்கம் பல உத்தியோகத்தர்களை நியமித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட நடமாடும் சேவைகளை மேற்கொண்டதன் மூலமாக, கிராமிய மக்களுக்கு இந்த நடமாடும் சேவை அவசியமானதாக காணப்படுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் முதலாம் நாள் படுக்கையில் உள்ள முதியவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்குவது எனவும், இரண்டாம் நாள் நெல்லியடி மத்திய கல்லூரியில் மருத்துவ முகாம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் தொற்றா நோய்கள், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பியல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரிந்திகா, பிரதேச வைத்திய அதிகாரி வி. கமலநாதன், தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி இளங்கோ ஞானியார், வைத்தியர் எஸ். குணநாதன் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் வி. சண்முகராஜா கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.