;
Athirady Tamil News

சகிப்புத் தன்மைக்கும் பரிசு இனவழிப்பா!

0

உலகில் சகித்து சகித்தே பெருந்துயரை அனுபவிக்கும் இனமாக ஈழத் தமிழ் மக்கள் உள்ளனர்.

தமிழ் மக்கள் தமது உரிமைக்காக எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் போராடுகிறார்கள் என்றால் எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

ஆனாலும் ஒடுக்குமுறையையும் இனவழிப்பையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருப்பது என்பது மிகவும் துயரமான விடயமாகும்.

விடுதலையையும் அமைதியும் சுதந்திரமும் வேண்டிய இனமாக நாம் போராடிக் கொண்டே இருக்கிறோம். சகிப்பின் எல்லையைக் கடந்தும் போராடுகிற போதும் மீண்டும் மீண்டும் பயங்கரமான விளைவுகளுக்கு நாம் முகம் கொடுத்துக் கொண்டிருப்பதே இங்கே வேதனையான விடயம்.

உலக சகிப்புத்தன்மை நாள்
நவம்பர் 16 உலக சகிப்புத்தன்மை நாளாகும். மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் நாள் இதுவாகும்.

இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு 1995ஆம் ஆண்டு முதல் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வருங்கால சந்ததியினரை, போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.

மேலும், மனித குலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை மனிதர்களிடையே இருக்க வேண்டும் என்பதை இந்த நாளின் வழியாக வலியுறுத்துகின்றனர்.

உலகம் எங்கும் போர் மற்றும் முரண்பாடுகள் பல்வேறு சமூகங்களை பாதிக்கின்றது. அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

அவை தீர்க்கப்பட வேண்டியதாகவும் நீக்கப்பட வேண்டியதாகவும் உள்ள போதும்கூட சகிப்புத்தன்மை பற்றிய எண்ணங்களையும் கோட்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம், முரண்பாடுகளையும் பயங்கரமான விளைவுகளையும் தவிர்க்கலாம் என்று இந்த நாளின் அர்த்தம் பேசப்படுகிறது.

குறிப்பாக முரண்பாடுகளுக்கும் போருக்கும் அகிம்சை வழியிலான தீர்வுகளை கண்டடையும் முயற்சிகளை இந் நாள் வலியுறுத்துகின்றது.

ஆனாலும்கூட முரண்பாடுகளின் குரூரத் தன்மைகள் காரணமாக இந்த நாளின் அர்த்தம் கேள்விகளாலேயே நிரம்பியுள்ளது.

மனித வாழ்வில் சகிப்புத்தன்மை
முரண்பாடுகளும் சிக்கல்களும் தனிப்பட்ட வாழ்விலும் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது. ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்கள் என்ற வகையிலும் தனித்துவமானவர்கள் என்ற வகையிலும் அடிப்படைக் குணாம்சங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

நம் அன்றாட வாழ்வில் எழும் சிக்கல்களை சகிப்பது என்பது மனிதனின் ஆற்றலுடனும் உளநிலையுடனும் தொடர்புபடுகிறது. குடும்ப வாழ்வில் சகிப்புத்தன்மை தொடர்பான வலியுறுத்தல்கள் உள்ளபோதும்கூட ஒவ்வொருவரதும் அணுகுமுறை காரணமாக அது மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

அதனால் சகிப்புத் தன்மை குறித்து நாம் நிலையான ஒற்றைத்தன்மையான போக்கை இனங்காணப்பது என்பது சிக்கலாகவே இருக்கிறது.

இதேவேளை தனிப்பட்ட வாழ்வில் நிரம்பிய சிக்கல்கள், பொதுவாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தொழில் இடங்களிலும் பொது சமூக நிறுவனங்களிலும் கூட்டான செயற்பாடுகளில் அதுவே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

தனிப்பட்ட வாழ்வில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு சகிப்புத் தன்மையை கொண்டிராத ஒரு நபர் தன் தொழில் இடத்திலும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவார்.

அதேபோன்று கூட்டாகச செயற்பட வேண்டிய சமூகம்சார்ந்த நிறுவனச் செயற்பாடுகளிலும் அவரிடம் இருந்து முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.

மனிதர்களுக்கு அடிப்படையில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்ற போதும் தனித்தனியானவர்களின் உரிமைகளையும் தனித்துவத்தையும் பாதிக்க அனுமதிக்கவும் இயலாது.

உலகில் சகிப்புத்தன்மையின் தேவை
உலகில் சகிப்புத்தன்மை குறித்த தேவை இருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்த எண்ணக்கருக்களை முன்வைப்பவர்கள், அதனை எந்தளவுக்கு பின்பற்றுகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இன்றும் உலகில் போர் நடந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடக்கிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போரும் நடக்கிறது.

அத்துடன் சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுக்கும் நாடுகள் யாவும் போரில் ஈடுபடும் இந்த நாடுகளுக்கு ஆதரவாக நிற்கின்றன.

ஆயுத பலத்தை வழங்குகின்றது. அரசியல் ஆதரவை வழங்கி முரண்பாடுகளுக்கும் போருக்கும் வழி செய்கிறது.

சகிப்புத் தன்மை பற்றிய கோட்பாடு முன்வைக்கப்படுகிற போதும்கூட அதனைப் பின்பற்றுவதில் பல நாடுகள் கோட்டை விட்டுள்ளன.

சொல்லுக்கும் செயலுக்குமான இந்த இடைவெளியில் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கவும் நேரிடுகிறது.

உலகில் எல்லா நாள்களும் எல்லாக் கோட்பாடுகளும் அதிகாரம் மிக்கவர்களுக்கும் வல்லமை மிக்கவர்களுக்கும் சாதகமான பயன்படுத்தப்படுவது போலவே இந்த நாளும் கையாளப்படுகிறது.

அதேவேளை உலகில் எல்லா நாள்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுவதுபோலவே இந்த நாளும் கையாளப்படுகிறது என்பதே உண்மையான நிலவரமாகும்.

ஈழத் தமிழர்களின் சகிப்புத்தன்மை
இலங்கைத் தீவில் சுதந்திர இலங்கைக்காக ஈழத் தமிழர்கள் பெரும் உழைப்பை வழங்கியுள்ளார்கள். பெரும் தியாகங்களை புரிந்துள்ளார்கள்.

அத்துடன் இலங்கை சுதந்திரம் அடைகின்ற காலத்தில் பிரிபடாத ஒன்றுபட்ட நாடு பற்றிய எண்ணத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்வைத்தார்கள்.

இதுவே ஈழத் தமிழ் மக்களின் பெரும் சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்புமாகும். ஆனாலும்கூட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதையும் அவர்களை ஒடுக்குவதையும் சிங்களப் பேரினவாத அரசு தனது வழிமுறையாக மேற்கொண்டது.

1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அதற்கு எதிராக அகிம்சை வழியான போராட்டத்தை ஈழத் தமிழ் மக்கள் மேற்கொண்ட வேளையில் இனப்படுகொலையே பரிசளிக்கப்பட்டது.

சகிப்புத்தன்மை வழியாக அகிம்சையை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் ஈழத் தமிழ் மக்கள் முதல் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து தோற்றுப் போனார்கள்.

அத்துடன் அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் வன்முறையே பதிலும் பரிசுமானது. அப்பாவி தமிழ் மக்கள்மீது பெரும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

யாழ் நூலகம் என்ற ஆசியாவின் அறிவுப் பொக்கிசம்மீது மிகப் பெரிய இனவன் அழிப்பு நிகழ்த்தப்பட்டது. உலகத் தமிழாராட்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்மீது மிகப் பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது.

அறிவு வழியான சிந்தனைகளும் பொக்கிசங்களும் வன்முறையால் அழிக்கப்பட்டதனை எப்படியான அனுபவமாக கொள்வது?

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய சகிப்பு
ஈழத் தமிழ் மக்கள் அகிம்சைவழியிலான போராட்டங்களுக்கு பதிலற்ற நிலையில், வன்முறையே பரிசான நிலையில், சகிப்பின் எல்லையைக் கடந்த நிலையில்தான் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

ஈழத் தமிழ் மக்களை ஆயுதம் ஏந்த வைத்தது இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் பேரினவாதிகளின் அணுகுமுறையும் ஒடுக்குமுறையுமே.

இந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது.

புலிகளை அழித்துவிட்டு தீர்வை முன்வைப்போம் என்ற அரசின் வாக்குறுதி என்பது இனவழிப்புப் போருக்கான யுக்தியே என்பதையே காலம் இப்போது உணர்த்துகிறது.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லை. அரசியல் தீர்வை முன்வைக்காமல் எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருக்கிறது அரசு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் விடுதலை வேண்டி ஈழ நிலம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது.

போரில் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி ஈழ நிலம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு மத்தியிலும் நிலங்களை ஆக்கிரமிக்கும் பெரும் போர் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

தனிநாடு கேட்கமாட்டோம் என்று தமிழ் தலைவர்கள் அடித்து சத்தியம் செய்துவிட்ட பிறகும் இப்படி அநீதிகளால் ஈழத் தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருப்பது ஈழ மக்களின் சகிப்புத் தன்மைக்கு பதிலாகவும் பரிசாகவும் இனவழிப்யையும் ஒடுக்குமுறையையும் கையளித்தலின் தொடர் அணுகுமுறையே ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.