;
Athirady Tamil News

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

0

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்ச அளவாக 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பார்க்காத வகையில் அதிகபட்ச அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்களிடையே ஏற்பட்ட எழுச்சி எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு வழக்கமானது என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக பெண் வாக்காளர்களின் வாக்களிப்பு ஆர்வத்தை அனைத்து வாக்குப்பதிவு மையத்திலும் காண முடிந்தது. இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரையில் அவர்கள் வாக்களித்த விதம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகவும், சிந்திக்கும் வகையிலும் இருந்தது.

தமிழ்நாட்டில் பாலின விகித அடிப்படையில் பார்க்கும்போது 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 1,044 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த விகிதம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்களைக் கருத வைத்தது. அதுபோன்று பெண் வாக்காளர்களை முதன்மை வாக்கு வங்கியாக அரசியல் கட்சிகள் கருதப்பட மற்றொரு காரணமும் உண்டு.

அதாவது, ஆண் வாக்காளர்களில் அதிகப்படியானோர் ஏதேனுமொரு அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவே இருப்பர். ஆனால், பெண் வாக்காளர்களில் அதிகப்படியானோர் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்திராமல் தனித்த வாக்கு வங்கியாகவும், வாக்களிப்பதை தானே முடிவு செய்பவர்களாகவும் விளங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், கிராமங்களில் பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கணவர் அல்லது உறவினர்கள் முடிவு செய்பவர்களாக இருந்தனர். ஆனால், அண்மைக்காலமாக பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பெண்களின் வாக்களிப்பு சதவீதத்தை உற்று நோக்கினால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்பவர்களாக பெண்கள் மாறி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற ஓர் ஆய்வில் 70 சதவீத பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கணவரிடமோ அல்லது உறவினர்களிடமோ ஆலோசிக்கவில்லை என்றும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்பவர்களாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பத்தாண்டுகளுக்கும் மேலான நிலையில் இந்த சதவீதமானது அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்களின் வாக்களிப்பு சதவீதத்தைக் காண முடிந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 2.93 கோடி பெண் வாக்காளர்களில் 2.51 கோடி பேர் அதாவது, 85.76 சதவீதம் பேரும், 2.80 கோடி ஆண் வாக்காளர்களில் 2.34 கோடி பேர் அதாவது, 83.57 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தாங்களே, முன்னதாகவே முடிவு செய்பவர்களாக இருப்பதால், வாக்களிக்கவும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.

இந்தியாவின் தேர்தல்களில் பெண்களின் தற்போதைய மாற்றமானது ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாகும். 1962-இல் 48 சதவீத பெண்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், அது 2014-இல் 66 சதவீதமாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் ஆண்களின் வாக்குப்பதிவு 5 சதவீத அளவுக்கே உயர்ந்தது.

பெண்களின் இத்தகைய வளர்ச்சியானது 2019 தேர்தலில் ஆண்களுக்கு நிகராகவும், அதற்கடுத்த தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே 2024 மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் 65.72 ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு சதவீதம் 65.55 ஆகவும் இருந்தது.

பெண்களின் இந்த வாக்களிக்கும் ஆர்வமானது மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிறப்பாகவே தெரிகிறது. உண்மையில் இந்திய தேர்தல் வரலாற்றில் 2017-18-இல் தான் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1962 முதல் 2018 வரையான 50 ஆண்டு காலத்தில் பெண்களின் வாக்களிப்பு 27 சதவீதமும், ஆண்களின் வாக்களிப்பு 7 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஆண், பெண் வாக்காளர்களின் வாக்களிப்பு நோக்கங்களின் தளங்கள் வேறு வேறாக இருப்பதைக் காண முடிகிறது. மாநில அளவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அளவிலும் பெண்கள் தெளிவாக யாரையும் சார்ந்திராத வாக்கு வங்கியாக இருக்கிறார்கள்.

இதனால் அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களின் மாறுபட்ட தேவைகளைச் சந்திக்கவும், வெவ்வேறு வகைகளில் அவற்றுக்குப் பதிலளிக்கவும் வேண்டியுள்ளது.

அதனாலேயே அண்மைக்காலமாக பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் பெண் வாக்காளர்களைச் சார்ந்ததாகவே இருப்பதைக் காண முடிகிறது. கட்சிக் கொள்கைகளும், பரப்புரைகளும் முன்னெப்போதையும்விட அதிக அளவில் பெண் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்துகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.