;
Athirady Tamil News

திருமண உல்லாச பயணங்களுக்காக புகழப்படும் இலங்கை!

0

திருமணத்தை ‘ஆயிரம் காலத்து பயிர்’ என முன்னோர்கள் கூறினர். மனித வரலாற்றில் எக்காலப் பகுதியிலாயினும் எப்பிராந்தியத்திலாயினும் சமய நம்பிக்கைகள் எதுவாயினும் திருமணம் என்பது இரண்டு பேருக்கிடையிலான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்பதைத் தாண்டி இரண்டு குடும்பங்களுக்கிடையில் இடம்பெறும் உணர்வுபூர்வமான உறவுப் பரிமாற்றமாகக் கருதப்பட்டது.

இலங்கை இந்தியா உள்ளிட்ட கீழைத்தேய ஆசிய மண்டல நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் என்பது பிறக்கவிருக்கும் ஆயிரமாயிரம் தலைமுறைகளின் தோற்றத்துக்கான ஆரம்ப நிகழ்வாகக் கருதினர்; கொண்டாடினர்.

“எனவே தான், திருமண வைபவம் நடைபெறும் தளத்தைத் தெரிவுசெய்வதிலும் மிகுந்த அக்கறை செலுத்தினர். இரண்டு தரப்பு குடும்பங்களும் ஒன்று சேர்வதற்கும் அன்பை, உறவை பரிமாறிக்கொள்வதற்கும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுக்கக் கூடிய இடமாக இருக்க வேண்டுமென்பதில் கவனமெடுத்தனர். அந்த இடம் அல்லது தளம் தமது குடியிருப்பாக, மண்டபமாக, பொது வெளியாக என எதுவாகினும் அவர்களின் எதிர்ப்பார்ப்பு அமைதியும் ஆனந்தமும் ஆகும். ”

‘திருமண சுற்றுலாத் தளம்’ என்பது திருமண வைபவ கலாசாரத்தில் மாற்ற முடியாத அடையாளங்களை பதித்துவரும் புதியதொரு மாற்றமாகும். அதாவது ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது திருமண வைபவத்தை வேறொரு நாட்டில் நடத்துவது என்றால் வியப்படைவீர்கள்

உல்லாசப் பயணத்துறை உலகம் முழுதும் வளர்ந்து வருகின்றது. புதிய பயணத்தளங்கள் தேடப்படுகின்றன. அதில் கடல்கடந்த திருமணங்கள் வருடாந்தம் சுமார் 14% – 15% வீதம் வரை வளர்ச்சியடைகின்றது. கடந்த 2025 இல் சர்வதேசிய ரீதியாக சுமார் 1.5 பில்லியன் மக்கள் பயணித்தார்கள் என்றால், அதுவொரு பாரிய தொகை, இதனை தினமும் 4 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் கணிக்க முடியும். அதிலும் குறிப்பாக திருமணங்களுக்காக.

இலங்கையில் நடைபெறும் சுற்றுலாத்தள திருமணங்களில் அதிகமானவை இந்தியத் திருமணங்களாகும். ஆசிய மண்டலத்தில் ஆழமா க வேரூன்றிய பாரம்பரியங்களைக்கொண்ட சமூகங்கள் வாழும் இந்தியாவின் திருமணம் என்பது முன்னர் குறிப்பிட்டது போன்று இரண்டு குடும்பங்கள் கூட்டுச் சேரும் வைபவமாகும்.

இத்திருமணங்கள் எப்போது கடல் கடந்து நடைபெற ஆரம்பித்தனவோ, அத் திருமணங்களுடன் பணமும் சேர்ந்து கடல் கடக்க ஆரம்பித்தது. எனவே, இத்திருமணங்களை குடும்ப நிகழ்வு என்ற வட்டத்தைத் தாண்டி ஒரு வருடத்துக்கு சுமார் 100 பில்லியன் டொலர் பரிமாற்றம் நடக்கும் பாரிய உல்லாசப் பயணத்துறை நிகழ்வுகளாக மாறியுள்ளன.

இலங்கை சர்வதேசிய ரீதியாக திருமண சுற்றுலாத்தளமாக அங்கீகாரம் பெறுவதற்கும் முன்னர் இந்தோனேஷினா, பாலி, மலேசியா, வியட்னாம் ஆகிய தென்கிழக்காசிய நாடுகள் இந்தியத் திருமணங்கள் நடைபெறுவதற்கான தளங்களாக விளங்கின. இந்நாடுகள் மட்டுமல்ல, ஜரோப்பிய நாடுகளான கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகல் ஆகியனவும் தள திருமண சுற்றுலாத் தளங்கள் எனும் சுற்றுலாத்துறை சந்தையில் பெரும் பங்கைக் கைபற்றுவதில் போட்டியில் ஈடுபட்டுள்ள நாடுகளாகும்.

இந்திய திருமணங்களைக் கவர்ந்தால், ஒரு மணமகனையும் மணமகளையும் மாத்திரம் கவரவில்லை, மாற்றாக நுற்றுக் கணக்கான விருந்தினர்களையும் சேர்த்து கவர்கின்றீர்கள். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உந்துதலை வழங்குவதோடு அத் திருமணத்துக்காக வருகை தருவோரின் மூலம் உள்நாட்டில் வேறுபல (சுற்றுலாத்துறை சாராத) தொழில்களுக்கும் வருமானத்தை பெறலாம் என்பதை இந்நாடுகள் இனங்கண்டுள்ளன.

எனவே, இந்திய திருமண வைபவம் ஒன்று இலங்கையில் நடைபெறுவதைக் கண்ணுற்றீர்களென்றால் அங்கு சோடிக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரங்களுக்கும் வேடிக்கைகளுக்கும் அப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியையும் காண்பீர்கள்.

இந்தியர் இலங்கையை நாடக் காரணம் என்ன?

இலங்கை திருமண சுற்றுலாச் சந்தையின் மையமாக விளங்குவதற்கு, குறிப்பாக இந்திய திருமணங்களைக் கவர்வதில் இலங்கையின் இயங்குவிசையாக அமைவதை பின்வருமாறு பட்டியலிட முடியும்.

இந்தியாவுக்கு மிக அருகாமையில் அமைந்திருப்பது முதன்மை காரணமாக கூறப்பட முடியும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேரடியான விமானப் போக்குவரத்து இருப்பதனால் பயணச் செலவும் நேரமும் மீதப்படுகின்றது. அண்மைக் காலமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானதோர் அம்சமாகும்.

மணமகனும் மணமகளும் வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றவர்களாக இருந்தாலும் கூட, இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் பல விமான சேவைகள் இயங்குவதனால் திருமணத்துக்காக இலங்கையைத் தெரிவு செய்வதை வசதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவை விட இலங்கையில் திருமண வைபவமொன்றுக்கு ஏற்படும் செலவு சுமாராக 20 – 30% வீதம் குறைவானது என்ற காரணி இலங்கையைத் தெரிவுசெய்வதற்கு மறைமுக உந்துதலாக அமைந்திருக்கின்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார, மரபு ரீதியான, உணவு, உடை மற்றும் பாரம்பரியங்களில் காணப்படும் ஒற்றுமை போன்றனவும் தனது தாய் நாடு அல்லாதபோதும் அந்நியமான உணர்வு ஏற்படாமையும் தனது சொந்த இல்லம் என்ற உணர்வை வழங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். திருமணத்தின் சமய ரீதியான சடங்குகளை நடத்துவதற்கு மதகுருமார் பூசாரி ஆகியோரை இலங்கையில் பெற்றுக்கொள்ளக் கூடியதும் இந்தியர்கள் தமது திருமணங்களுக்கு இலங்கையைத் தெரிவுசெய்வதற்கு புறக் காரணியாக அமைந்துள்ளது எனக் கருத முடியும்.

இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கள்

இலங்கை அரசாங்கம் இந்திய மக்களுக்கு தெளிவான செய்தியொன்றைக் கூறியுள்ளது. அதாவது, ‘நாம் உங்கள் சம்பிரதாயங்களை புரிந்துவைத்துள்ளோம். உங்கள் நேரத்தை மதிக்கின்றோம். எனவே திருமணம் என்ற நிகழ்வை மிகச் சரியான தளமான அண்டை வீட்டிலேயே கொண்டாடுங்கள்’ என்ற செய்தியாகும்.

இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களின் பிழையான பொருளாதார செயற்பாடுகளால் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியுற்று அதிலிருந்து மீண்டெழும் இக்காலப் பகுதியில், தென் கிழக்காசியா மட்டுமல்ல தென்னாபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் போட்டிபோடும் இச் சந்தையில் தமக்குரிய இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் சவால்கள் இல்லாமலில்லை.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுகின்றது. மக்கள் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள், அன்பை பரிமாறுகின்றார்கள் என்பது ஐனாதிபதி அநுர குமர திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேசத்தை நோக்கி மீண்டும் மீண்டும் தெரிவித்த செய்தியாகும். இந் நற்செய்தியானது திருமண சுற்றுலா சந்தையை தாங்கி நிற்கும் முக்கியமான தூண் ஆவதுடன் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் இலங்கையின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

திருமண சுற்றுலா என்பது பொருளாதார வடிவத்தை மட்டுமல்ல இலங்கை பற்றிய அடையாளத்தையும் மாற்றுவதற்கு வழிகோலியுள்ளது.

இந்தியாவின் திருமண சுற்றுலாவுக்காக இலங்கை வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்காக இலங்கை முன்னெடுக்க வேண்டிய ஏற்பாடுகளில் திருமணத்துக்காக வருகை தருவோரை பாதுகாப்பானதொரு அமைதிச் சுழலில் (Serenity Bubble) வைத்திருப்பது இன்றியமையாதது.

திருமண வைபவம் என்பது பல்வேறு திருப்பங்கள் மற்றும் செலவினங்கள் அதிகமான ஒரு நிகழ்வாகும். எனவே, இந்தியத் திருமணங்களின் உணவு வகைகள், கலாசார மரபுகள், திருமணத்துக்கான நாட்களின் எண்ணிக்கையை அறிந்து வைத்திருத்தல் போன்றனவற்றுக்கு மேலாக இந்தியப் பிரஜைகளின் உணர்வுகளை புரிந்துவைத்திருத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

சராசரி சுற்றுலாப் பயண பருவ காலத்துக்கு மேலதிகமாக, இடைக்காலப் பகுதிகளில் சுற்றுலாப் பயணத்துறையை தக்கவைத்துக்கொள்வதில் திருமண சுற்றுலாக்கள் பங்குவகிக்கின்றன.

திருமணம் என்பது செலவு அதிகமான வைபவமென்றும், ஜந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும்தான் இதன் வருமானம் கிட்டும் என்பது போன்றதுமான கற்பிதங்கள் உலவினாலும் உண்மை நிலை என்னவெனில் திருமண வைபவம் என்பது ஒரு நாள் நிகழ்வோ சில மணி நேரம் நீடிக்கும் நிகழ்வோ அல்ல. எனவே உல்லாசப் பயணத்துறையின் எல்லா பகுதிகளையும் அது பூர்த்தி செய்கின்றது. உல்லாசப் பயணத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் தான் அப்பயணிகள் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். சாதாரண திருமணத்துக்குச் செலவழிக்கும் நாட்களை விட அதிகமான நாட்களை திருமண சுற்றுலாக்களுக்காக மக்கள் செலவிடுகின்றார்கள். திருமணத்திற்காக சென்ற நாட்டின் பல பாகங்களை கண்டு களிப்புறுவதற்காக மேலதிகமான நாட்கள் தங்கியிருப்பார்கள். இதனால் அந்நாட்டின் உணவு, அங்காடிப் பொருட்கள் உட்பட பல்வேறு சந்தை பொருட்கள் மற்றும் சேவைகள் விற்பனையாகின்றன.

இலங்கை பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான சுற்றுலாப் பயணத்துறையின் பிறிதொரு பரிணாமமாக திருமண சுற்றுலாக்கள் வளர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.