அறிவின் வளர்ச்சியா, வீழ்ச்சியின் தொடக்கமா?
ஒரு காலத்தில் மனிதன் ஒரு கேள்விக்கான பதிலைத் தேடி நூலகங்களுக்குச் சென்றான். பின்னர் இணையத்தைத் திறந்தான். இன்று, அவன் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே செயற்கை நுண்ணறிவைத் திறக்கிறான்.
ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு, ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு, ஒரு சந்தேகத்திற்கு பதில் வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு. நாம் செய்ய வேண்டிய பல விடயங்களை நமக்குப் பதிலாகச் செய்யும் அளவிற்கு அது நமது அன்றாட வாழ்வுக்குள் நுழைந்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குவதற்காக மனிதன் உருவாக்கிய இந்தத் தொழில்நுட்பம், ஒருநாள் நம்முடைய வாழ்க்கையைப் பற்றியே நாம் சிந்திக்கத் தேவையில்லாத நிலையை உருவாக்கிவிட்டால் என்ன ஆகும்?
மனிதனின் சிந்தனையில் பிறந்த செயற்கை நுண்ணறிவு, மனிதனுடைய சிந்தனையையே விழுங்கத் தொடங்கியிருக்கிறதா? இது செயற்கை நுண்ணறிவை எதிர்ப்பதற்கான கேள்வி அல்ல. மாறாக, அது வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எதைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? என்பதற்கான கேள்வி.
இன்று செயற்கை நுண்ணறிவு மருத்துவம், கல்வி, சுகாதாரம், செய்தித்துறை, சினிமா, வேலைவாய்ப்பு என எண்ணற்ற துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் பயன்கள் மறுக்க முடியாதவை. ஆனால் ஒவ்வொரு வசதிக்கும் பின்னாலும் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
குறிப்பாக கல்வியில், செயற்கை நுண்ணறிவு ஒரு மாணவனுக்குப் புரியாததைப் புரியவைக்கும் சிறந்த கருவியாக இருக்கலாம். ஆனால் அந்த மாணவன் தானாகத் தேடுவதற்கும், கேள்வி கேட்பதற்கும், சிந்திப்பதற்கும் முன்னரே செயற்கை நுண்ணறிவிடம் பதிலைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினால், நாம் உருவாக்குவது அறிவுள்ள தலைமுறையா அல்லது பதில்களைப் பெறத் தெரிந்த தலைமுறையா? ஒரு விடயத்தைத் தேடும்போது மனிதன் கேள்வி கேட்கிறான், தவறு விடுகிறான், மீண்டும் தேடுகிறான், பல கருத்துகளை ஒப்பிட்டு தனது சொந்த முடிவை உருவாக்குகிறான். அந்தச் செயல்முறையே அவனுடைய சிந்தனைத் திறனை வளர்க்கின்றது. செயற்கை நுண்ணறிவு எல்லாச் செயல்முறைகளையும் மனிதனுக்குப் பதிலாகச் செய்துவிட்டால், எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படுவது அறிவுள்ள மனிதர்களா அல்லது பதிலைப் பெறத் தெரிந்த மனிதர்களா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவின் சமத்துவப் பிரச்சினையும் கவனிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப வசதிகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. இணையம், சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் அறிவு இல்லாதவர்கள் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை அனுபவிக்க முடியாமல் போகலாம். இதனால் கல்வியில் காணப்படும் ஏற்கனவே உள்ள சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கக்கூடும். அத்துடன் செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்கள் எப்போதும் சரியானவை என்று நம்ப முடியாது. தவறான தகவல் வழங்கப்பட்டால் அதற்கான பொறுப்பு யாருடையது என்ற கேள்வியும் எழுகின்றது. அதேபோல், வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான முடிவுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்போது, ஒருவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் அல்லது நிராகரிக்கப்பட்டார் என்பதைத் தெளிவாக அறிய முடியாத பிரச்சினையும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை உருவாக்குகின்றது.
இன்று சமூக வலைத்தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்கள் மற்றும் காணொளிகள் பெருகி வருகின்றன. சில நொடிகளில் அழகான ஒரு படத்தை உருவாக்குவதற்காக நாம் நமது சொந்த கற்பனையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறோமா? ஒரு பதிவுக்காக செயற்கை நுண்ணறிவை நாடும் முன், ‘என்னால் என்ன உருவாக்க முடியும்?’ என்பதை சிந்திக்கத் தவறி விடுகின்றோமா? என்ற வினா எழுகின்றது. செயற்கை நுண்ணறிவை நமது சிந்தனைக்கு மாற்றாக அல்ல, நமது சிந்தனையை விரிவுபடுத்தும் கருவியாக இருக்க வேண்டும். நாம் அதனிடம் ஒவ்வொரு பதிலையும் கேட்பதற்குப் பதிலாக, அதைப் பயன்படுத்தி இன்னும் சிறந்த கேள்விகளை உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இறுதியாக, செயற்கை நுண்ணறிவை நாம் பயப்பட வேண்டிய ஒரு சக்தியாக பார்க்க வேண்டியதில்லை. அது மனிதனின் அறிவால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி. ஆனால் அந்தக் கருவி நமக்காகச் சிந்திக்கத் தொடங்கும் தருணத்தில், நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டும். நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறோமா, அல்லது செயற்கை நுண்ணறிவிடம் நமது சிந்தனையை ஒப்படைத்துவிட்டோமா? மனிதனின் உண்மையான வலிமை அவன் உருவாக்கிய தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லை, அவன் கேள்வி கேட்கும் திறனிலும், புதிதாகச் சிந்திக்கும் திறனிலும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனிலும், புதிய ஒன்றை உருவாக்கும் கற்பனையிலும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு நமக்குப் பதில்களைத் தரலாம். ஆனால் அந்தப் பதில்களை ஏற்றுக்கொள்வதா, கேள்வி எழுப்புவதா, அதைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்குவதா என்பதைத் தீர்மானிப்பது இன்னும் மனிதனின் கையில்தான் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வளவு வளர்ந்தாலும், மனிதன் தனது சிந்தனையை வளர்ப்பதை நிறுத்திவிடக் கூடாது. செயற்கை நுண்ணறிவு மனித சிந்தனையின் முடிவாக இருக்கக்கூடாது, அது மனித சிந்தனையின் அடுத்த படியாக இருக்க வேண்டும்.
‘செயற்கை நுண்ணறிவு வளரட்டும். மனித சிந்தனை மட்டும் மழுங்கிவிடக் கூடாது.’