தனிமையில் வாழ கற்றுக்கொள்ளும் இளைய தலைமுறை!
ஆயிரக்கணக்கான நண்பர்கள் சமூக ஊடகங்களில் இருந்தாலும், மனம் திறந்து பேசுவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலை இன்று பல இளைஞர்களின் வாழ்க்கையில் கணப்படுகின்றது. கூட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டே தனிமையைச் சுமக்கும் இளைய தலைமுறை, இன்று தனிமையில் வாழக் கற்றுக்கொள்கிறதா அல்லது தனிமைக்குள் வாழத் தள்ளப்படுகிறதா?
காலையில் கண் விழித்ததும் கைபேசியைத் தேடும் இளைஞர்கள், இரவு உறங்கச் செல்லும் வரையிலும் அதன் திரையுடனேயே தங்களது பொழுதைக் கழிக்கின்றனர். முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் உரையாடுகின்றனர். பிறரின் வாழ்க்கையைப் பார்க்கின்றனர். தங்களது மகிழ்ச்சியான தருணங்களைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பகிர்ந்துகொள்கின்றனர். இருப்பினும், இந்தத் தொடர்புகளுக்கு மத்தியில் அவர்களது மனதில் ஒரு கேள்வி எழுகிறது: உண்மையில் என்னைப் புரிந்துகொள்வதற்கு ஒருவர் இருக்கிறாரா?
இன்றைய இளைய தலைமுறையினரிடையே தனிமை என்பது வெறுமனே தனியாக இருப்பதைக் குறிக்கும் சொல்லாக மட்டும் இல்லை. குடும்பத்தினருடன் வாழ்ந்துகொண்டும், நண்பர்களுடன் பழகிக்கொண்டும், சமூகத்தில் பலருடன் தொடர்புகளைப் பேணிக்கொண்டும் மனதளவில் தனிமையை உணரக்கூடிய நிலையாக அது மாறியுள்ளது. தங்களது மகிழ்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ள முடியாமல், பல உணர்வுகளை மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை குறித்த கவலை இன்று சமூகத்தில் அதிகரித்துள்ளது. தனிமை எல்லா நேரங்களிலும் துயரத்தை ஏற்படுத்துவதில்லை. சிலர் தனியாக இருப்பதை விரும்புகின்றனர். புத்தகங்களை வாசிப்பது, இசையைக் கேட்பது, இயற்கையை இரசிப்பது, பயணம் செய்வது, தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றின் மூலம் அவர்கள் மன அமைதியைப் பெறுகின்றனர். இத்தகைய தனிமை ஒருவரின் சுயசிந்தனையை வளர்க்கவும், தமது இலக்குகளைத் தெளிவுபடுத்தவும் உதவக்கூடும். ஆனால், ஒருவர் விரும்பித் தனியாக இருப்பதற்கும், மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படாத காரணத்தால் தனிமைக்குள் தள்ளப்படுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. நண்பர்களால் புறக்கணிக்கப்படுதல், காதல் உறவுகளில் ஏற்படும் பிரிவுகள், குடும்பத்தில் புரிதலின்மை, கல்விசார் அழுத்தங்கள், பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவை இளைஞர்களை மனதளவில் தனிமைப்படுத்தக்கூடும். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் கேலி செய்வார்களோ அல்லது தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற அச்சமும் அவர்களை மௌனமாக இருக்கச் செய்கிறது. இதனால், தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கும் வலிகளுக்கும் தாங்களே பதிலளிக்க முயல்கின்றனர். ஒருகட்டத்தில், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வதே சிறந்தது என்று அவர்கள் கருதத் தொடங்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் சில நொடிகளில் தொடர்புகொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், தொடர்புகொள்வதற்கான வசதிகள் அதிகரித்துள்ளதால் உணர்வுபூர்வமான உறவுகளும் அதே அளவில் வலுப்பெற்றுள்ளன என்று கூற முடியாது. சமூக ஊடகங்களில் ஒருவர் நூற்றுக்கணக்கான நண்பர்களைக் கொண்டிருக்கலாம். அவரது புகைப்படங்களுக்கு விருப்பக்குறிகளும் கருத்துகளும் குவியலாம். ஆனால், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவருடன் அமர்ந்து பேசுவதற்கு ஒருவர் இல்லாமல் இருக்கலாம்.மேலும், சமூக ஊடகங்களில் பிறர் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களைப் பார்க்கும்போது, சில இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுகின்றனர். நண்பர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைவரும் வாழ்க்கையில் முன்னேறிவிட்டதாகவும் நினைத்து, தாங்கள் மட்டும் பின்னடைந்துவிட்டதாக உணரக்கூடும். உண்மையில், சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் வாழ்க்கை ஒருவரின் முழுமையான வாழ்க்கையாக இருப்பதில்லை. மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளும் மனக்கவலைகளும் இருக்கலாம். இதைப் புரிந்துகொள்ளாமல் பிறரின் வெளிப்படையான வாழ்க்கையுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளை ஒப்பிடுவது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சமநிலையைப் பேணுவதுடன், நேரடி உரையாடல்களுக்கும் உண்மையான உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும். இன்றைய இளைஞர்களின் தனிமைக்குப் பின்னால் பல சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் யாரையும் நம்பத் தயங்கலாம். நண்பர்களால் ஏமாற்றப்பட்ட ஒருவர் புதிய உறவுகளை உருவாக்குவதில் அச்சமடையலாம். குடும்பத்தினரால் தனது உணர்வுகள் புரிந்துகொள்ளப்படவில்லை என்று நினைக்கும் ஒருவர், தனது பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதையே நிறுத்திவிடலாம். இவ்வாறு ஒவ்வொரு அனுபவமும் ஒருவரின் மனநிலையை மாற்றக்கூடும். முன்பு மகிழ்ச்சியாக உரையாடிய ஒருவர் படிப்படியாக மௌனமாகலாம்.
தனிமை எப்போதும் ஒருவரை உடைத்துவிடுவதில்லை. சில நேரங்களில் அது அவரைத் தன்னைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக வாழ்ந்த ஒருவர், தனிமையில் இருக்கும்போது தனது விருப்பங்களையும் இலக்குகளையும் மீண்டும் ஆராயத் தொடங்கலாம். தனது மகிழ்ச்சிக்காக எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ளலாம். தன்னுடைய பலம், பலவீனம், விருப்பம், வெறுப்பு ஆகியவற்றை அறிந்துகொண்டு சுயமரியாதையுடன் வாழக் கற்றுக்கொள்ளலாம். தனியாக நேரத்தைச் செலவிடுவது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, நாட்குறிப்பு எழுதுவது, இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது போன்ற செயல்கள் மன அமைதியைப் பெற உதவக்கூடும். அதேபோன்று, அனைவரிடமும் தமது தனிப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை என்பதையும் ஒருவர் உணரலாம். நம்பிக்கைக்குரிய சிலருடன் ஆழமான உறவுகளைப் பேணுவது, பலருடன் மேலோட்டமான தொடர்புகளைக் கொண்டிருப்பதைவிட மனநிறைவைத் தரக்கூடும். ஆனால், தனிமையில் வாழக் கற்றுக்கொள்வது என்பது அனைவரையும் விட்டு விலகி வாழ்வதோ, பிறரின் அன்பும் ஆதரவும் தேவையில்லை என்று கருதுவதோ அல்ல. மனிதர்களுக்கிடையிலான உறவுகளும் உணர்வுபூர்வமான ஆதரவும் வாழ்க்கையில் முக்கியமானவை. சுயமாக வாழக் கற்றுக்கொள்வதுடன், தேவைப்படும் நேரத்தில் உதவி கேட்கவும் தெரிந்திருக்க வேண்டும்.