;
Athirady Tamil News

பிபின் ராவத்துடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிகாரிகள் குறித்து உருக்கமான தகவல்கள்…!!

0

பலியானோரில் வாரண்ட் ஆபீசர் பிரதீப்பும் ஒருவர். அவர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே பொன்னுகரா கிராமத்தை சேர்ந்தவர். 37 வயதான அவர், 2002-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் பணியாற்றி இருக்கிறார்.

சூலூரில் உள்ள விமானப்படை நிலைய ஊழியர் குடியிருப்பில் மனைவி ஸ்ரீலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருடைய தந்தை அரக்கல் ராதாகிருஷ்ணன் உடல்நல குறைவு காரணமாக செயற்கை சுவாசத்துடன் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தன் தாயார் குமாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதீப், மறுநாள் முப்படை தலைமை தளபதியுடன் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டரில் செல்லப்போவதாக பெருமையாக கூறியுள்ளார். ஆனால் அதுவே அவரது கடைசி பயணமாக ஆகிவிட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பிரதீப்பின் மகனுக்கு பிறந்தநாள். அதற்காக சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி விட்டு திரும்பினார்.

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் நடந்த பெருவெள்ளத்தின்போது விமானப்படை குழுவுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். அதற்காக அவரை கேரள அரசு கவுரவித்தது. அதற்கு முன்பு, வடஇந்தியாவில் பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

விபத்தில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டவுடன், பொன்னுகராவில் உள்ள அவரது வீட்டுக்கு உறவினர்கள் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடல் தகனம், சொந்த ஊரிலேயே நடக்கிறது.

இந்த விபத்தில் பலியான மற்றொருவர் லேன்ஸ் நாயக் சாய் தேஜா (வயது 29). பிபின் ராவத்தின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். ஆந்திர மாநிலம் குரபலகோடா மண்டலம் எகுவா ரெகடா கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த 2013-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். விநாயகர் சதுர்த்தியன்று கடைசியாக தன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அவரது மறைவுச்செய்தியால், அவரது கிராமம் சோகத்தில் மூழ்கியது.

பலியான மற்றொருவர் பிரித்விசிங் சவுகான் (42). உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள். இவர்தான் கடைக்குட்டி. கடந்த ரக்‌ஷா பந்தன் பண்டிகையை 3 சகோதரிகளுடன் கொண்டாடினார். ஒரு அக்காள், மும்பையில் வசிப்பதால் அவர் மட்டும் பங்கேற்கவில்லை.

4 நாட்களுக்கு முன்பு அவருடன் பெற்றோர் கடைசியாக பேசியுள்ளனர். விபத்து செய்தியை டி.வி.யில் பார்த்தவுடன், அவரது செல்போனுக்கு ஒரு சகோதரி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், ‘சுவிட்ச் ஆப்’ ஆக இருந்துள்ளது.

பிறகு சவுகானின் மனைவியை தொடர்பு கொண்டபோது, அதற்குள் மனைவிக்கு தகவல் தெரிந்து குடும்பமே துயரத்தில் மூழ்கி விட்டது.

பலியானவர்களில் ஜூனியர் வாரண்ட் ஆபீசர் ராணா பிரதாப் தாசும் ஒருவர். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டம் தால்சரை சேர்ந்தவர். 12 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வந்தார்.

அவருக்கு பெற்றோரும், மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவருடைய பெற்றோர் இதய நோயாளிகள் ஆவர்.

விபத்தில் பலியான இன்னொரு அதிகாரி ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங். இவர் அந்த ஹெலிகாப்டரின் இணை விமானி ஆவார். அவருடைய தந்தை, கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் பலர் ராணுவத்தில் உள்ளனர்.

சொந்த ஊரில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் அவரது உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு சிலை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் தக்டா பகுதியை சேர்ந்த சத்பால் ராய், பலியானவர்களில் ஒருவர். ஹவில்தாராக இருந்த இவர், கடைசியாக தீபாவளிக்கு ஊருக்கு சென்றார்.

மீண்டும் ஏப்ரல் மாதம் வந்து, குடும்பத்தினரை சுற்றுலா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதற்குள் விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன், ராணுவத்தில் இருக்கிறார்.

பலியான மற்றொரு அதிகாரி பிரிகேடியர் லக்விந்தர்சிங் லிட்டர் ஆவார். அரியானா மாநிலம் பஞ்ச்குலாவை பூர்வீகமாக கொண்டவர். பிபின் ராவத்தின் பாதுகாப்பு உதவியாளராக இருந்தார். விரைவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற இருந்தார். காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சீன எல்லையில் ஒரு படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி உள்ளார்.

முப்படைகளுக்கான சீர்திருத்தங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் போன்றவற்றை பெற்றுள்ளார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.