;
Athirady Tamil News

தட்டம்மை நோய் தடுப்பு தினம்!! (மருத்துவம்)

0

‘‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதைவிட பெற்றோருக்கு மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. குழந்தைகளின் ஆரோக்கியமும் பெற்றோரின் மகிழ்ச்சியும் தொடர வேண்டும் என்றால், உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியம்’’ என்று தட்டம்மை தடுப்பூசி பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான லட்சுமி பிரசாந்த்.

‘‘Measles என்ற வைரஸால் ஏற்படக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான் தட்டம்மை. மற்ற காய்ச்சலுக்கும் இதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. முதலில் சாதாரண காய்ச்சல் போல தெரிந்தாலும், பிறகு சரும பிரச்னைகளும் தட்டம்மையில் ஏற்படும். இந்த சரும அலர்ஜி முகத்திலோ, காதுக்குப் பின்புறமோ ஆரம்பிக்கும்போதுதான் தட்டம்மை உறுதியாகும்.

இருமல், மூக்கொழுகுதல், கண் சிவந்து போதல் அறிகுறிகளுடன் காய்ச்சல் இருப்பதை வைத்தும் தட்டம்மை என்று தெரிந்து கொள்ள முடியும்’’ என்கிற டாக்டரிடம், ‘தட்டம்மை குணப்படுத்திவிடக் கூடிய சாதாரண காய்ச்சல்தானே’ என்று கேட்டோம்.
‘‘தட்டம்மை 80 சதவிகிதம் குணப்படுத்திவிட முடிகிற காய்ச்சல்தான். சில நேரங்களில் தீவிரமான வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல், கண் சிவந்து போவதால், கார்னியாவில் அல்சர், பார்வையிழப்பு ஏற்படுவது போன்ற அசாதாரண பிரச்னைகளும் ஏற்பட்டுவிடலாம்.

அந்த அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கக் கூடாது என்பதற்காகத்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 2007-2015ம் ஆண்டுகளில் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் 79 சதவிகிதம் தடுப்பூசியினால் குறைந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறியிருப்பதிலேயே, இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தத் தட்டம்மை தடுப்பூசியை குழந்தை பிறந்த 9வது மாதத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 15வது மாதத்தில் MMR என்ற தடுப்பூசியையும், இதன் பூஸ்டர் தடுப்பூசியை 4 முதல் 6 வயதுக்குள்ளும் போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் நல மருத்துவரிடமும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

இதை பெற்றோருக்கு நினைவுபடுத்துவதற்காகவே மருத்துவமனைகளில் வாக்ஸினேஷன் கார்ட் கொடுக்கிறார்கள். அரசும் தனது இணையதளங்கள், விளம்பரங்களின் வழியாக மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பெற்றோர் இந்த வழிகாட்டுதலை சரியாகப் பின்பற்றினால் தட்டம்மை உள்பட பல நோய்களைத் தடுத்துவிடலாம்’’ என்கிறார் லட்சுமி பிரசாந்த்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.