;
Athirady Tamil News

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!!

0

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது. இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, அதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணைக்காக சோனியா காந்திக்கு 2 முறை சம்மன் அனுப்பியும், கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன்பாக அவரால் ஆஜராக முடியவில்லை. தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2-வது முறையாக ஆஜர்
சோனியாவிடம் 26-ந் தேதி 2-வது முறையாக விசாரணை நடத்தப்படும் என அறிவித்த அமலாக்கத்துறை, இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் நேற்று தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரோடு, ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்போடு அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அதன்பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து போய்விட்டார். அதைத்தொடர்ந்து சம்மன் சரிபார்ப்பு, வருகை தந்ததற்காக கையெழுத்திடல் போன்ற நடைமுறைகள் நடத்தி முடித்து, காலை 11.15 மணிக்கு சோனியாவிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். விசாரணை நடத்தப்பட்ட அறைக்கு பக்கத்து அறையில், கொரோனாவில் இருந்த மீண்டு வந்துள்ள தாயார் சோனியாவுக்கு தேவைப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுடன் பிரியங்கா காந்தி இருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஏறத்தாழ 2½ மணி நேரம் சோனியாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து மதிய சாப்பாட்டுக்காக சோனியா, மகள் பிரியங்காவுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

7 மணி வரை விசாரணை
பகல் 3½ மணிக்கு சோனியா மீண்டும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது மாலை 7 மணி வரை தொடர்ந்தது. ஏறத்தாழ 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையின்போது, ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனத்தினை ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியதில் சோனியாவின் பங்களிப்பு என்ன, கம்பெனி நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகள் என்ன, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து 7 மணி அளவில் சோனியா காந்தி புறப்பட்டு சென்றார். சோனியா காந்தி வீட்டுக்கும், அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கும் இடையேயான 1 கி.மீ. தொலைவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்றும் தொடருகிறது சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறி உள்ளது. எனவே இன்று மீண்டும் அவரிடம் விசாரணை தொடரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.