;
Athirady Tamil News

பூஜை தட்டில் வைத்த பணம் தங்கத்துடன் மாயம் !!

0

மட்டக்களப்பு நகரிலுள்ள வீட்டில் செய்வினை இருப்பதாக தெரிவித்து, பூஜை தட்டில் வைத்த பணத்தையும் தங்க ஆபரணத்தையும் திருடிச் சென்ற இளம் பெண் பூசாரியை மட்டு. தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கொக்கட்டிச்சோலை, கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண், மட்டக்களப்பு நகரில் வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டுக்கு 2022 டிசெம்பர் 22ஆம் திகதி சென்றுள்ளார்.

இதன்போது, அந்த வீட்டில் செய்வினை இருப்பதாகவும் “நான் நாககன்னி தெய்வம் ஆடி, அதை அகற்றித் தருகிறேன்” என பெண் போலி பூசாரி தெரிவித்ததையடுத்து வீட்டின் உரிமையாளரும் பூஜை செய்ய உடன்பட்டார்.

இதையடுத்து, அன்றைய தினம் இரவு செய்வினையை அகற்றுவதற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, பூஜை தட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணமும் தங்க ஆபரணங்களும் வைக்கவேண்டும் எனக் கோரியதையடுத்து, அதைப் பூஜை தட்டில் வைத்து, வெள்ளை துணியால் மூடிகட்டியவாறு பூஜை அறையில் பூஜை நடைபெற்று முடிந்தது.

இதன் பின்னர், பூசாரி அந்த அறைக் கதவை மூடிவிட்டு, “கதவை 10 தினங்களுக்கு திறக்க கூடாது; அங்கு நாக கன்னி உலாவருவார். 10 தினங்களின் பின்னர், நான் வந்து கதவை திறந்து, வௌ்ளைத் துணியால் கட்டிவைக்கப்பட்ட பூஜை தட்டை அவிழ்துத் தருவேன்” எனக்கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

10 நாள்கள் முடிந்ததும் வீட்டின் உரிமையாளர், பூசாரியின் அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது, அந்தத் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர், பூஜை அறைக் கதவை திறந்து, துணியால் கட்டி வைக்கப்பட்ட பூஜை தட்டை அவிழ்த்துப் பார்த்தபோது, தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாயையும் தங்க மோதிரத்தையும் பெண் பூசாரி திருடிச்சென்றுள்ளமை தெரியவந்தது
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் இவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் செய்வினை இருப்பதாகவும் அதனை எடுத்து தருவதாக தெரிவித்தும் பணம், தங்க ஆபரணங்களை திருடிய ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.