;
Athirady Tamil News

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!!

0

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட குங்குமார்ச்சனை சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டில் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு பக்தர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அபிஷேக சேவை டிக்கெட்டின் விலை ரூ.400 ஆக இருந்தது. தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாரத்தில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் திருப்பாவாடை சேவை டிக்கெட் ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலையைப் போல் சுபதம் டிக்கெட் முறையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுபதம் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அபிஷேக அனந்தர தரிசனத்துக்கான டிக்கெட் ரூ.20 ஆக இருந்தது.

தற்போது அந்த டிக்கெட் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பத்மாவதி தாயார் கோவிலில் பல ஆண்டுகளாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உயர்த்தப்படவில்லை. தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை ஒரே அடியாக உயர்த்தி இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒரு லட்டு பிரசாதத்தின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு விலையை உயர்த்துவதற்கு முன்பாக பக்தர்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று பரவலின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அதிக லட்டு பிரசாதங்களை தயாரித்து, அதை விற்பனை செய்ய முடியாமல் ரூ.50-க்கு விற்பனை செய்த லட்டுவை ரூ.25-க்கு மானிய விலையில் விற்பனை செய்தது. அந்த லட்டு பிரசாதத்தின் எடை 175 கிராம் முதல் 180 கிராம் வரை இருந்தது. ஒரு லட்டுவை தயாரிக்க ஆகும் செலவு தொகை ரூ.40 ஆக இருந்தது.

ஆனால், லட்டுவின் விலையை தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கி வருவது நடந்து வருகிறது. இருப்பினும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உயா்த்தப்பட்ட லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.