;
Athirady Tamil News

அரசு நிறுவனங்களின் செலவுகள் குறைப்பு!!

0

2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களில் 6% குறைப்பு மற்றும் அரசாங்க செலவின முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான மதிப்பிடப்பட்ட மொத்த அரசாங்க வருமானத்தை சேகரிப்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான சிரமங்களினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்கும் வகையில், அரசாங்க செலவினங்களை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற செலவினங்களை முடிந்தவரை குறைக்கும் நோக்கில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

இதன்படி, வரவு செலவு திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட தொடர் செலவினங்களை 6 வீதத்தால் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவினங்களைக் குறைப்பதற்கான அடையாளம் காணப்பட்ட முறைகள் அடங்கிய திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய வரவு செலவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.