;
Athirady Tamil News

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் – ஜனாதிபதி!!

0

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (பெப் 05) இரவு ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்வதற்கு இது பெரும் ஆசிர்வாதமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்து தெரிவித்ததாவது,

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துடனேயே கொழும்பு நவம் பெரஹாரவும் நடைபெறுகிறது. நவம் பெரஹெரவும் கங்காராமை விகாரையும் இந்த நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடையவை. கங்காராமை விகாரையை வணக்கத்திற்குரிய ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் ஸ்தாபித்தார் என்பதை நினைவுகூர விரும்புகின்றேன்.

இந்த நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையை நான் மீண்டும் நினைவுகூரத் தேவையில்லை. பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்காக அவர் அன்று தலைமைப் பொறுப்பை ஏற்று செயற்பட்டார்.

பாணந்துறை விவாதத்திற்கும் மீகட்டுவத்தே குணானந்த தேரருக்கும் அவர் பெரும் ஆதரவை வழங்கினார். மேலும் வித்யோதய பிரிவெனாவையும் ஆரம்பித்தார்.

கொழும்பில் உள்ள ஆனந்த வித்தியாலயம் உட்பட பல முக்கிய பௌத்த பாடசாலைகளை ஒல்கட் நிறுவினார். மேலும், வணக்கத்திற்குரிய ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், பிரிவென் இயக்கத்தின் மூலம் புதிய பிக்கு தலைமுறையை உருவாக்குவதற்கும் உழைத்தார்.

அப்படியானால், பௌத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக எமது கலாச்சாரத்திற்கு உரிய இடத்தை வழங்குவதற்கு அவர் உழைத்துள்ளார். அந்தப் பின்னணியில்தான் நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்கான இயக்கத்தில் பங்களிக்கும் வாய்ப்பை நமது தலைவர்கள் பெற்றனர்.

எஃப்.ஆர்.சேனாநாயக்க, டி. பி. ஜயதிலக, டி.எஸ்.சேனநாயக்க போன்ற தலைவர்கள் வணக்கத்திற்குரிய ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் காட்டிய பாதையில் சென்று இலங்கைக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க உழைத்தனர்.

ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரருக்குப் பின்னர், வணக்கத்துக்குரிய தெவுந்தர ஸ்ரீ ஜினரத்ன தேரர் மற்றும் தெவுந்தர வாசிஸ்ஸர நாயக்க தேரர் ஆகியோர் இந்த கங்காராமை விகாரையின் தலைமைப் பதவியை வகித்தனர். இவ்விருவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த கங்காராமை விகாரை, நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அமைதியாக ஆதரவளித்ததை நான் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்த விகாரைக்கு பங்களித்த பலர் சுதந்திர போராட்டத்திலும் பங்களித்துள்ளனர். டி.ஆர்.விஜேவர்தன, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன உட்பட பலர் இந்த விகாரைக்கு உதவி வழங்கியுள்ளனர்.

அப்படி ஒரு தொடர்பைக் கொண்ட விகாரையுடன் தான் இன்று 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடினோம். மேலும், பெப்ரவரி 5ஆம் திகதி நவம் மகா பெரஹர நடைபெறுகிறது.

1978ல் நாங்கள் எடுத்த முடிவின்படி ஆண்டுதோறும் இந்த பெரஹரவை நடத்த முடிந்துள்ளது. தற்போதைய கங்காராமை விகாராதிபதி வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரின் யோசனையின் பிரகாரம், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் பிரதமர் ஆர்.பிரேமதாச ஆகியோர் நவம் பெரஹரவை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர். பின்னர் இந்த நாட்டில் உருவான அனைத்து ஜனாதிபதிகளும் இந்த பெரஹரவை நடத்த ஆதரவு வழங்கினார்கள்.

குறிப்பாக இந்த விகாரையின் அபிவிருத்திக்காக வணக்கத்திற்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரர் ஆற்றிய பணியை நாம் நினைவுகூருவதுடன், அவரின் அர்ப்பணிப்புக்காக நன்றி கூற வேண்டும்.

மேலும், இந்தப் பணியைத் தொடரும் வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட ஏனைய தேரர்களையும் பாராட்டுகிறேன்.

நாம் அனைவரும் இன்று கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இருந்து மீள முயற்சித்து வருகிறோம். நாம் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் மீள முயலாமல் இந்த நாட்டை மீட்க முயற்சிக்க வேண்டும்.

அதே நேரத்தில், நமது கடந்த கால பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கடந்த கால மரபுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த எசல மகா பெரஹர பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று இந்த பெரஹர எமது கலாசாரத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது. அதை யாரும் நிராகரிக்க முடியாது. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் இதைப் பற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

மேலும்,வருடாந்தம் இந்தப் பெரஹர நடத்தப்படுவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இது ஒரு ஆசிர்வாதமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையும், பெப்ரவரி 05 ஆம் திகதி கங்காராமை நவம் மஹா பெரஹர நடைபெறுவதையும் ஒரு சுப அடையாளமாக குறிப்பிடலாம்.

இன்று நாம் சிரமமான காலத்தை அனுபவித்தாலும் இவ்வருட எசல பெரஹெர சமயத்தில் இதனை விட அதிக நிவாரணம் பெற முடியும் என நம்புகிறேன். ஆசிர்வாதத்திற்கான சுப அடையாளமாக கருதி இந்த நவம் பெரஹரவை ஏற்பாடு செய்தவர்களுக்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹுனுபிட்டிய கங்காராம விஹாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையிலான மகாசங்கரத்தினர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன,பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.