;
Athirady Tamil News

அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்: கார்கே!!

0

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:- அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல். இதை முறையாக விசாரிக்க வேண்டும். மாநிலங்களவையில் நான் பேசியபோது, பாராளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத எதையும் கூறிவிடவில்லை. நான் அதானி விவகாரத்தில் சில கேள்விகளை எழுப்பினேன். அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஏன் மோடி அரசு நடத்தவில்லை?

பாராளுமன்றத்தில் மோடியும், அவரது அரசும் அதானி என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அனுமதிக்கவில்லையே, அதன் பின்னணியில் உள்ள காரணம்தான் என்ன? ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி), அமலாக்கத்துறை இயக்குனரகம், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்.எப்.ஐ.ஓ), கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை ஏன் முடங்கிப்போய்விட்டன? எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, ஏன் இன்னும் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்? அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை. மக்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மக்களின் பணத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஊழல்கள் குறித்து அரசிடம் கேள்விகள் எழுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றவாதிகளின் பொறுப்பு. ஆனால் அதானி விவகாரத்தில் அவர்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் எங்களை அனுமதிக்கவில்லை. எனவே தான் எங்கள் ஆட்கள் போராடுகிறார்கள். அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்போம். ஆனால், ஜனநாயக ரீதியில் பாராளுமன்றம் இயங்குவதை அரசு விரும்பவில்லை. ஜனநாயக ரீதியில் செயல்பட தயாராக இல்லை என்றால், சர்வாதிகாரமாக பேசினால், மக்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி நான் சபைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வெறுமனே எனது பேச்சின் அம்சங்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதால், மக்களும், ஊடகங்களும் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு விட முடியாது.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கேட்கின்றன. இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டை காப்பாற்ற வேண்டும், ஏழை மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.