;
Athirady Tamil News

சிவ சிவ கோஷத்துடன் இரவு முழுவதும் களைகட்டிய மகா சிவராத்திரி – ஈஷாவில் ஜனாதிபதி பங்கேற்பு !!

0

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். ஆதியோகி சிலை முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருந்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்ததால் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவராத்திரியையொட்டி நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.