;
Athirady Tamil News

அமெரிக்கா விமானத்தை விரட்டி அடித்த சீனா – வான் வழியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0

தென் சீன கடல் பகுதியில் பறந்த அமெரிக்க விமானத்தை வெளியேற கோரி சீனா விமானப்படை எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பகுதியில் அமைந்த தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.

அண்டை நாடுகளான ஜப்பான், தைவான் போன்ற பல்வேறு ஆசிய நாடுகளாலும் பகிரப்படும் கடல் பகுதியில், சீனா அவ்வப்போது அத்துமீறும் வகையில் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் வான்பகுதிக்கு வெளியே அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த பி-8 ரக விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனை கவனித்த சீனாவின் விமான படை வானொலி வழியே எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதற்கு மேலும் எங்களை நெருங்க கூடாது. இல்லையென்றால், நடக்க போகும் விசயங்களுக்கு நீங்களே முழு பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க விமானத்தின் இடது இறக்கை பகுதியை இலக்காக கொண்டு 500 அடி தொலைவில் தனது போர் விமானம் ஒன்றை சீனா தயாராக நிறுத்தியது. தொடர்ந்து அந்த விமானம், அமெரிக்க விமானம் சென்ற திசையில் சென்று அதனை பின்தொடர்ந்து உள்ளது.

ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு பின்னரே சீன போர் விமானம் திரும்பியுள்ளது. தென் சீன கடல் பகுதியில் பல தீவு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதுபற்றி அந்த அமெரிக்க விமானத்தில் பயணித்த அமெரிக்க கடற்படை கண்காணிப்பு விமான தளபதியான கேப்டன் வில் தோராசன், தன்னுடன் பயணித்த உலக செய்தி நிறுவன நிருபரிடம் கூறும்போது,

”சர்வதேச வான்வெளியில் பறக்கும்போது, அந்த நாட்டுடன் தொழில்முறையில் மற்றும் பாதுகாப்பான உரையாடலில் ஈடுபட நாங்கள் முயற்சிப்போம். ஆனால், தென் சீன கடல் பகுதியில், எங்களுக்கு எந்த பதிலும் வராது. 18 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அமெரிக்க கடற்படையில் நான் இருக்கிறேன்.

தென் சீன கடல் பகுதியில் நிறைய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சீனா, செயற்கையான முறையில் சிறிய தீவுகளையும், ஓடுபாதைகளையும் உருவாக்கி வருகிறது.” என அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வான்வெளியில் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவின் உளவு பலூன் பறந்தது என்ற சர்ச்சை உருவானது. அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா கூறியது.

எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறியது. இந்த உளவு பலூன் விவகாரம் தெரிய வந்ததும், சீனாவுக்கு செல்லும் பிளிங்கனின் பயணம் ஒத்தி போடப்பட்டது.

தொடர்ந்து உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் அமெரிக்கா இராணும் சுட்டு வீழ்த்தியது.

இதன் தொடர்ச்சியாக கனடாவிலும் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமான படையினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இதுபோன்ற பொறுப்பற்ற செயல் ஒருபோதும் மீண்டும் நடக்க கூடாது என்று ஜெர்மனியின் முனிச் மாநாட்டில் சீன தூதர் வாங் யி உடனான சந்திப்பில் சீனாவிடம் கோடிட்டு காட்டப்பட்டது.

எனினும், அமெரிக்காவின் இந்த செயல், சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.