;
Athirady Tamil News

உறையூரில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று நடக்கிறது!!

0

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் 5-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் சேஷவாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்தரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவைக்காக பிற்பகல் 1.15 மணிக்கு உறையூர் நாச்சியார் கோவில் சேர்த்தி மண்டபம் சென்றடைவார். 108 வைணவத் திருத்தலங்களில் உறையூர் நாச்சியார் கோவில் 2-வது இடம் என்ற சிறப்புடையது.

இக்கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்புக்கோவில் ஆகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் தான் உறையூர் நாச்சியார் கோவிலுக்கும் உற்சவர் ஆவார். எனவே தான் உறையூர் நாச்சியார் கோவிலில் நாச்சியாருக்கு மட்டும் தான் உற்சவர் விக்கிரகம் உள்ளது. பெருமாளுக்கு உற்சவர் விக்கிரகம் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேர்த்தி சேவையில் காட்சியளிப்பார்.

இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காகநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரியாற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன உபய மண்டபத்தை சென்றடைவார். அங்கிருந்து புறப்பட்டு நாச்சியார் கோவில் முன்மண்டபத்தை பிற்பகல் 12 மணிக்கு சென்றடைவார். பின்னர் முன்மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடைவார். நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை பகல் 2 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெறுகிறது.

பின்னர் சேர்த்தி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார். 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும் நம்பெருமாள் -ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. 6-ந்தேதி பங்குனித்தேர்த்திருவிழாவும், 7-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.