;
Athirady Tamil News

கல்வி அமைச்சர் உத்தரவாதம் தந்தால் விரிவுரையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் – ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு!!

0

அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு கிடைக்குமாயின் தமது பணிப் புறக்கணிப்பை கைவிடப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின், அந்தப் பேச்சுவார்த்தைகளில் தம்மால் முன்மொழியப்பட்ட தீர்வுகளுக்கு கல்வி அமைச்சர் எழுத்துமூல உத்தரவாதம் தந்தால், தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் சபை நேற்று ஏப்ரல் 01 ஆம் திகதி முடிவு செய்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட்டால் விடுமுறை நாள்களிலும் பணியாற்றி, தொழிற்சங்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட – இழந்த நாள்களை மீட்பதற்காகத் தாம் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அறவீட்டுக்கு எதிராக – நியாயமான தீர்வைக் கோரி மார்ச் 9 ஆம் திகதி முதல் நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. அத்துடன் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் பாதிகப்பட்டுள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் பல்கலைக் கழகங்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கடந்த வாரம் முதல் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்று – ஏப்ரல் 01 ஆம் திகதி கூடிய பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சபை, தொழிற்சங்க நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றிக் கலந்துரையாடியுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின், அந்தப் பேச்சுவார்த்தைகளில் தம்மால் முன்மொழியப்பட்ட தீர்வுகளுக்கு கல்வி அமைச்சர் எழுத்துமூல உத்தரவாதம் தந்தால், தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் சபை முடிவு செய்துள்ளது.

மேலும், ஆராய்சிக்கான கொடுப்பனவுக்கு வரி விலக்களிப்பு, வரி அறவீடு காரணமாக கடன் மீளளிப்பில் சிரமங்களை எதிர்கொண்டவர்களுக்கு கடன் நிவாரணம் அல்லது மீள்ளிப்பு காலத்துக்கான நீட்சி, ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை அமைத்தல் மற்றும் ருகுண பல்கலைக்கழகத்துக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியை நியமித்தல் ஆகிய விடயங்களில் கல்வி அமைச்சர் எழுத்து மூல உத்தரவாதம் தந்தால் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று பிரதிநிதிகள் சபை முடிவு செய்துள்ளதாக சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.