;
Athirady Tamil News

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப் இன்று கோர்ட்டில் சரணடைகிறார்!!

0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இன்று கோர்ட்டில் டிரம்ப் சரண் அடைகிறார். இதற்காக அவர் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டார். சுமார் 2.30 மணி நேர பயணத்துக்கு பிறகு நியூயார்க்கை வந்தடைந்த டிரம்ப் அங்குள்ள டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு சென்றார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து கைய சைத்தபடி சென்றார்.

அங்கு இரவு தங்கிய டிரம்ப் இன்று வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர் ஆகிறார். அப்போது அவரது விரல் ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் பதிவுகள் சேகரிக்கப்படும். விசாரணைக்கு டிரம்ப் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் கைது வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அந்நகரில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் ஆஜராகும் கோர்ட்டு வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே நியூயார்க் மேயர் எரிக் ஆடும்ஸ் கூறும்போது, டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் போது வன்முறையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். நியூ யார்க்குக்கு வருவதை பற்றி சில குழப்பவாதிகள் யோசித்துக் கொண்டு இருக்கலாம். எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. எளிதாக உங்களை நீங்களே கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் குறிப்பிட்ட நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றார். அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தனது கட்சியினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவருக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.