;
Athirady Tamil News

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பா.ஜனதா 44-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை!!

0

பா.ஜனதாவின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றினார். பா.ஜனதாவின் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் மோடி கட்சி எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா கட்சியை வளர்க்க தொண்டர்கள் செய்த தியாகங்களை கணக்கில் எண்ணிவிட முடியாது. மதிப்பிட முடியாத அளவிற்கு கட்சியை வளர்க்க உழைத்து உள்ளனர்.

ஒவ்வொரு பா.ஜனதா தொண்டர்களையும் வாழ்த்துகிறோம். அனுமன் ஜெயந்தி நன்னாளில் அனைவருக்கும் அவருடைய ஆசிர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இன்று நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் நம்மை இன்றும் ஊக்குவிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பயணத்திற்கு நம்மை ஊக்குவிக்கிறது. 2014 முதல் இந்தியா புதுவேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. அரசியல் கலாசாரத்தை பா.ஜனதா மாற்றாது. ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியே எங்கள் நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜனதா விரும்புவதில்லை.

இலவச ரேசன் திட்டம், உடல்நலக் காப்பீடு மற்றும் மற்ற நலத்திட்டங்களை பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. சமூக நீதியே எங்களுக்கு முக்கியம். ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது. இதே போல சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்து கொள்வோம். எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்து உள்ளனர். ஆனால் நாங்கள் மக்கள் பணிக்காக பாடுபடுகிறோம் எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியாது. சிறிய சாதனைகளில் திருப்தி அடைகின்றன. பெரிய கனவு காண்பதிலும், இன்னும் பெரிய இலக்குகளை அடைவதிலும் பா.ஜனதா நம்பிக்கை கொண்டுள்ளது.

370-வது சட்ட பிரிவு என்றாவது ஒருநாள் வரலாறாக மாறும். எதிர்க்கட்சிகள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பா.ஜனதா செய்து வரும் பணியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று அவநம்பிக்கை அடைந்து உள்ளனர். பா.ஜனதா குறித்து தவறான பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். ஆனால் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சதியும், பொய் பிரசாரமும் எடுபடாது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும், சமூக ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் பா.ஜனதாவினருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.