;
Athirady Tamil News

ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

0

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார். இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் எண்ணற்ற பதவிகளை வகித்ததற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்திஜி ஆகியோருக்கு நன்றி. 2 தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் நான் கட்சி பணியாற்றுவதற்கான மதிப்புக்குரிய விஷயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை என உண்மையில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனாலேயே, சமீபத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தேன். ஓர் அரசியல் தளத்தின் வழியே நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடரபாளரான கேசவன் பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உலகின் மிக பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்ததற்காக, அதுவும் பிரதமர் மோடி தமிழகத்தில் இருக்கும்போது, உங்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த காலத்தில் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது இளம் தலைமுறையினரும் விலகி வருவது காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.