;
Athirady Tamil News

புதுவையில் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரம் ரத்து!!

0

புதுவையில் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அரசியல் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் வாங்கி இருக்க வேண்டும், அல்லது சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த அடிப்படையில் 2009-ம் ஆண்டு பா.ம.க. புதுவை மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.

இதில் 2011-ல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் 2.48 சதவீதம்தான் வாக்கு வாங்கியது. 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க. வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 3.17 சதவீதம் வாக்கு பெற்றிருந்தது. 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்ததேர்தலில் 0.71 சதவீதம்தான் வாக்குகள் பெற்றிருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை. இதையடுத்து 6ஏ விதிகளின் படி விளக்கம் கேட்டு பா.ம.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தது. இருப்பினும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு பா.ம.க. ஆஜராகவில்லை. இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசியல் கட்சியின் செயல் திறன் மறு ஆய்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 16.12.2021-ல் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. 29.12.2021-ல் பா.ம.க.விடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விசாரணைக்கும் பா.ம.க. ஆஜராகவில்லை. அதன் பிறகு 20.3.2023-ல் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது கட்சியின் பிரதிநிதி வந்து கட்சியின் அங்கீகாரத்தை தொடர தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டார். 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய சின்னத்தி லேயே போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.

ஆனால் 2011 முதல் 2021 வரை புதுவை யூனியன் பிரதேசத்தில் நடை பெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்தது. மேலும் 6ஏ விதிகளின்படி கொடுக்கப்பட்ட பலன்களை பா.ம.க. முழுமையாக அனுபவித்து விட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளில் புதுவையில் பா.ம.க.வுக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் ரத்து செய்கிறது. பா.ம.க. இன்று முதல் புதுவை யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாகவே கருதப்படும். இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.