;
Athirady Tamil News

பா.ஜ.க.வால் என்னை தடுக்க முடியாது… வயநாடு தொகுதியில் முழங்கிய ராகுல் காந்தி!!

0

தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு வந்தார். வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார்.

வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் கல்பற்றா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர். பாராளுமன்றத்தில் என்னை பேச விடாமல் தடுத்தனர். சபாநாயகரிடம் சென்று எனது வாதத்தை விளக்க அனுமதி கேட்டேன். பாஜக என்னிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை.

ஆனால், நான் மக்களுக்காக பேசுவதை பாஜகவால் ஒருபோதும் தடுக்க முடியாது. அவர்கள் (பாஜக) என்னை சிறையில்கூட அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்காக நான் பேசுவதை தடுக்க முடியாது. எம்.பி.யாக இல்லாததால் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம். அவர்கள் எனது வீட்டை எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு அந்த இல்லத்தில் இருக்க பிடிக்கவில்லை. வயநாட்டில் எத்தனையோ பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்தார்கள். அவர்கள் எப்படி போராடினார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.