;
Athirady Tamil News

சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது!!

0

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாக குண்டம் அமைப்பதற்காக நேற்று மதியம் மேற்கு கோபுரம் வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் யாகசாலை கட்டுமானத்திற்கு களிமண் எடுத்து பணிகள் மேற்கொள்ள பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் 2 அடி ஆழம் பள்ளம் வெட்டியபோது சுவாமி சிலைகள் தென்பட்டது. தொடர்ந்து தோண்ட, தோண்ட அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்கமுலாம் பூசிய கலசங்கள் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் முழுமையாக அவை வெளியில் எடுத்தபோது, ஐம்பொன் சிலைகளான விநாயகர், வள்ளிதேவசேனா சுப்ரமணியர், அதிகாரநந்தி, சுவாமி- அம்பாள், பூர்ண புஸ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட (அரை அடி முதல் சுமார் 2 அடி வரையிலான) 22 சுவாமி சிலைகள், தேவார பதிகம் பதியப்பட்ட 462 செப்பேடுகள், 15 சுவாமி பீடங்கள், தங்கமுலாம் பூசிய கலசங்கள், திருவாச்சிகள், பூஜைபொருட்கள், உலுக்கை உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகள் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்காலத்து சிலைகள், செப்பேடுகள் எனவும், இவை சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டவை என தொல்லியத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் வந்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, தகவலறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை மண்டல ஆலோசகர் மதிவாணன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது.

தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு வருகைபுரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை மட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.