;
Athirady Tamil News

தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி பிரச்சனைக்கு சித்த மருந்துகள்… !!

0

தொழில் ரீதியாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கிறவர்களுக்கு தண்ணீர், காலநிலை மாறுபாட்டினால் தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள். இதை தடுக்க சித்த மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் போது பருவநிலை மாற்றம், தண்ணீர் மாறுபாடு போன்றவற்றை பலரும் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதும், வைரஸ் மூலமாகவும் இந்த பிரச்சினைகள் வரலாம். இதுபோன்று சாதாரணமாக வருகின்ற காய்ச்சலுக்கு எளிய சித்த மருத்துவம் உள்ளது. இந்த மருந்துகளை உங்கள் கைவசம் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல்: நிலவேம்பு கசாயம் இதற்கு சிறந்த நிவாரணம் தரும்.

பெரியவர்கள் 60 மி.லி. இருவேளை, சிறுவர்கள் 15 முதல் 30 மி.லி. இருவேளை, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 10 முதல் 15 மி.லி. வீதம் ஏழு நாட்கள் எடுக்க வேண்டும். அடுத்து திரிகடுகு சூரணம் ஒரு கிராம், லிங்கச் செந்தூரம் 100 முதல் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. இருவேளை தேன் அல்லது வெந்நீரில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட வேண்டும். தொண்டை வலி, குரல் கரகரப்பு: இந்தப்பிரச்சினைக்கு தாளிசாதி வடகம் ஒன்று அல்லது இரண்டு மாத்திரை மூன்று வேளை கடித்து சாப்பிட வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்துவது நல்லது. தலைவலி: சிலருக்கு தலைவலி காணப்படும். அதுபோன்ற நிலையில் நீர்க்கோவை மாத்திரையை வெந்நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்று போட வேண்டும்.

இருமல்: வறட்டு இருமல் முதல் சாதாரண இருமல் சிலருக்கு காணப்படும். அதற்கு ஆடாதோடை மணப்பாகு 5 முதல் 10 மி.லி, இரண்டு முதல் மூன்று வேளை குடிக்க வேண்டும். தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும். உணவுகள்: பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். முட்டையை அரை வேக்காட்டாக்கி அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். குடிப்பதற்கு, குளிப்பதற்கு வெது வெதுப்பான வெந்நீரை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போதும், பயணத்தின் போதும் `மாஸ்க்’ அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.