;
Athirady Tamil News

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து உதவிகளும் செய்ய தயார்: பிரதமர் மோடி பேட்டி!!

0

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், ‘ஜி-7’ நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார்.

அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின. அதன்படி ‘ஜி-7’ உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம். உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், “பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்” என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.