;
Athirady Tamil News

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

0

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. அந்தவகையில், தோ்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செயல்பாடுகளை முழுமையாக முடக்குவது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது. தனிநபா்கள் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்தக் கட்சியைத் தண்டிப்பது முறையல்ல.

கடந்த காலங்களில் சா்ச்சைக்குள்ளான சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தை மீண்டும் செயல்படுத்துவது மற்றும் அரசியல் கட்சிகளைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் தோ்தலின் நம்பகத்தன்மையைச் சீா்குலைக்கும். எனவே, அவாமி லீக் கட்சியைத் தடை செய்த முடிவை இடைக்கால அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னணி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவா் போராட்டத்தை அடுத்து, பிரதமா் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். பின்னா், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இந்நிலையில், வங்கதேசத்தின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்பட அவாமி லீக் கட்சித் தலைவா்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்தக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால அரசு தடை விதித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப். 12-ஆம் தேதி நடைபெறும் பொதுத்தோ்தலில் அவாமி லீக் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.