;
Athirady Tamil News

பட்டாசு குடோன் வெடித்து தொழிலாளர்கள் 3 பேர் பலி: மரங்களில் உடல் பாகங்கள் தொங்கிய பரிதாபம்!!

0

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அருகில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமி அதிர்ந்தது. வெடி விபத்தில் வீடுகள் குலுங்கின. அப்போது பட்டாசு சேமிப்பு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த சாது நாகேந்திரா (வயது 31), எல்லக்கட்டாவை சேர்ந்த சங்கரய்யா (30), ஏழுமலை (45) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மற்றொரு தொழிலாளி வீரராகவ் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கல்யாண் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளர்களின் உடல் பாகங்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொங்கியது. இது வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது. விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருப்பதி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை. பட்டாசு சேமித்து வைக்க மட்டுமே அனுமதி உள்ளது. பட்டாசு சேமிப்பு தொடங்கியதற்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலேயே பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை எனவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.