;
Athirady Tamil News

புலனாய்வாளர்களால் தாக்கப்பட்ட கஜேந்திரகுமார் எம்பிக்கு துப்பாக்கி முனையிலும் அச்சுறுத்தல்!!

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணியில் வைத்து பொலிஸ் புலனாய்வாளரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இன்னொரு பொலிஸாரால் பிஸ்டல் எடுத்து குறிவைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கஜேந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 3 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விளையாட்டுக் கழகத்தினரின் அழைப்பின் பேரில் மைதானத்தில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை என்னோடு கட்சியின் உறுப்பினர்களும் உடன் இருந்தார்கள்.

குறித்த சந்திப்பு நடந்துகொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் குறித்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து எங்களை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எமது அமைப்பின் கொள்கைக்கு அமைவாக MSD பாதுகாப்பை பெறாமல் இருப்பதனால் எங்களின் அணியை சார்ந்த பகுப்பாய்வு உத்தியோகத்தர் குறித்த இரு இளைஞர்களிடமும் சென்று என்ன விடயத்துக்கு வந்துள்ளீர்கள்? நீங்கள் யார் என வினவிய போது, அவர்கள் ஒரு தெளிவான பதிலைக் கொடுக்க மறுத்தார்கள்.

அதன்போது இங்கு வந்திருப்பவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கிறது. நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்தாமல் இங்கே இருக்க முடியாது என்று கூறிய போது தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகப்படுத்திய போது நான் அவ்விடத்துக்கு சென்று உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு கேட்ட வேளையில் அதனை தர மறுத்தார்கள். அப்போது எனது அடையாளத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தி எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் குறிப்பிட்டு நீங்கள் அடையாள அட்டையை காட்டா விட்டால் உங்களை செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று சொன்ன இடத்தில் அதில் ஒருவர் என்னை தாக்கி எனது பகுப்பாய்வு உத்தியோத்தருக்கும் ஹெல்மெட்டால் அடித்து விட்டு ஓடினார். அப்போது எனது சாரதியும், பகுப்பாய்வு உத்தியோத்தரும் அவருக்கு பின்னால் ஓடினாலும் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. மற்றவரை அங்கு நின்ற இளைஞர்களும், என்னுடைய அணியை சார்ந்தவர்களும் சுற்றி வளைத்து அவரிடம் அடையாள அட்டையை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அயலில் உள்ள பாடசாலையில் இருந்த பொலிஸ் விளையாட்டு சீருடையை அணிந்த ஒருவரும், அவரோடு பொலிஸ் சீருடையில் ஆயுதத்தை தாங்கியிருந்த இன்னுமொருவரும், வேலிக்கு கிட்ட வந்து அவர்கள் எங்களுடையவர்கள். நீங்கள் அவரை தடுத்து வைக்க முடியாது. என கடுமையான வார்த்தைகளில் கூறி அவரை உடனடியாக விடுங்கள் என்ற கருத்தை கூறியிருந்தார்.

அப்போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர்கள் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் இடுப்பில் பிஸ்டல் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அப்படியான நிலையில் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம். அந்த வகையில் வந்து அவர்களை போக வைக்க உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று சொன்ன இடத்தில், குறித்த பொலிஸார் கடுமையான தூஷண வார்ததைகளை பயன்படுத்தி என்னை ஏசியது மட்டுமல்ல. ஒரு கட்டத்தில் அவர் தனது இடுப்பில் இருந்த பிஸ்டலையும் லோட் பண்ணி எனக்கு குறி வைத்தார்.

அந்த நேரம் ஒரு பொலிஸ் ஜீப் மைதானத்துக்குள் வந்தது. அதிலிருந்து இறங்கி வந்த வயதான பொலிஸ் அதிகாரி தன்னை acting oic மருதங்கேணி என அறிமுகப்படுத்தி எங்களால் சுற்றி வளைக்கப்பட்டு வைத்திருந்த நபர் தங்களுக்கு உரியவர். அவரை விடுங்கள் என கூறிய போது, நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னை அடையாளப்படுத்தி எனது அடையாள அட்டையையும் காட்டி நடந்த சம்பவத்தை மிக தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறி இங்கே எனது உரிமைகள் முற்று முழுதாக மீறப்பட்டுள்ளதையும் தெரிவித்தேன். அதனை கேட்ட குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த இருவரையும் punishment transfer இல் அனுப்புவதாகவும் கூறி இருந்தார். அதனை நான் ஏற்க மறுத்தபோது மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் எனக்கு மருதங்கேணி பொலிஸாரினால் தான் அச்சுறுத்தல் உள்ளது. எவ்வகையில் வர முடியும் என கேள்வி எழுப்பினேன். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறினேன். இது தொடர்பில் யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளர் கனகராஜ் அவர்களிடமும் முறையிட்டுள்ளேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.