;
Athirady Tamil News

முழுநேர உறுப்பினர் ஆகாத நிலையில், நேட்டோ படைகளை அனுமதிக்கும் சுவீடன்!!

0

நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார். நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார். சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது. சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை. நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.