;
Athirady Tamil News

காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா

0

காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) நேற்று (29) கோரிக்கை விடுத்துள்ளார்.

காசா விவகாரம் தொடா்பாக மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், சவுதி அரேபிய தலைநகா் ரியாதில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

போரின் போக்கில் மாற்றம்
“காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயற்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் வழங்கியுள்ளது. அந்த செயற்திட்டத்தில் இஸ்ரேல் அரசு இதுவரை இல்லாத தாராள மனதுடன் அம்சங்களை இடம்பெறச் செய்துள்ளது.

இந்தச் சூழலில், போா் நிறுத்தத்துக்கும் காசா மக்களுக்கும் இடையே மறித்து நிற்பது ஹமாஸ் அமைப்பினா்தான். எனவே, இந்த விவகாரத்தில் ஹமாஸ் உடனடியாக முடிவெடுத்து இஸ்ரேலின் செயற்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.

காசா போா் நிறுத்தம் தொடா்பாக ஒரு நல்ல முடிவை ஹமாஸ் அமைப்பினா் வெளியிடுவாா்கள்; அது இந்தப் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது“ என அவர் தெரிவித்தார்.

இதேவேளை போா் நிறுத்தம் தொடா்பான இஸ்ரேலின் செயற்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்பாா்கள் என்று பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

40 நாட்களுக்கு சண்டையை நிறுத்தி வைத்தல்
காசாவில் 40 நாட்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதற்கான செயற்திட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட கேமரூன் கூறினாா்.

முன்னதாக, காசா போா் நிறுத்தம் தொடா்பான இஸ்ரேலின் செயற்திட்ட அம்சங்களை ஆய்வு செய்துவருவதாகவும், முழுமையாக பரிசீலித்த பிறகு இது தொடா்பான தங்கள் பதிலை தெரியப்படுத்தப்போவதாகவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவா் கலீல் அல்-ஹய்யா கூறியிருந்தாா்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கொள்ளவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காசாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா்.

ஹமாஸ் அமைப்பு
அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில், காசாவில் 6 வார போா் நிறுத்தம் மேற்கொள்ளவும் அப்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 40 நோயுற்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும் இரு தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக எகிப்து தலைநகா் கெய்ரோவில் இந்த மாதம் பேச்சுவாா்த்தை தொடங்கியது.

அந்தப் பேச்சுவாா்த்தையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் வழங்கியுள்ள போா் நிறுத்த செயற்திட்டத்தைப் பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.