;
Athirady Tamil News

மாநிலங்களவை தேர்தல்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்!!

0

கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்களில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் ஒருவர். அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் சட்டசபையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுகல்ஜி தாகோர், தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஜெய்சங்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார். பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:- மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.

மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு அம்சத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு அண்டை நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நாம் அந்த சவாலை வலிமையாக எதிர்கொண்டுள்ளோம். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். மீதம் உள்ள 2 இடங்களுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இதுபோல், மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி உள்பட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 6 இடங்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.