;
Athirady Tamil News

37வது பொதுப் பட்டமளிப்பு விழா -2023!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார். அங்கு அவர் வழங்கிய ஊடக விபரிப்பில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு :

பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர்; சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ அலகு மற்றும் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 162 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஆறு பேரும்;;, முது மெய்யியல்மாணி பட்டத்தை 04 பேரும்;, தூய சக்தி தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை 2 பேரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 56 பேரும்;, கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 86 பேரும், கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை (பகுதி நேரம்) 05 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 03 பேரும் பெறவிருக்கின்றனர்.

உள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 113 பேர் மருத்துவமாணி மற்றும் சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், மருத்துவ விஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 92 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 28 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 119 பேர் விஞ்ஞானமாணிப் (பொது) பட்டத்தையும், 27 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டத்தையும், 21 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
இவர்களுடன் விவசாய பீடத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியற் பீடத்தைச் சேர்ந்த 116 பேர் பொறியியல்; சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த 96 பேர் உயிர்முறைமைகளில் சிறப்புத் தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 93 பேர் பொறியியலில் சிறப்புத் தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 25 பேர் சித்த வைத்திய சத்திர சிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 282 பேரும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 16 பேரும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 88 பேரும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை 03 பேரும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து பொதுக் கலைமாணி பட்டத்தை 217 பேரும்;, சட்டமாணி சிறப்புப் பட்டத்தை 69 பேரும் பெறவிருக்கின்றனர். சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தில் இருந்து நுண்கலைமாணி (சங்கீதம்;, நடனம், சித்திரமும் வடிவமைப்பும்) சிறப்புப் பட்டத்தை 135 பேரும் பெறவிருக்கின்றனர்.

மேலும், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்திலிருந்து தாதியியலில்; சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டத்தை 54 பேரும், மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 55 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 58 பேரும் பெறவிருக்கின்றனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் (முன்னைய வவுனியா வளாகம்) பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 03 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 04 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தையும், 6 பேர் விஞ்ஞானமாணிப் (பிரயோக கணிதமும் கணிப்பிடலும்) பட்டத்தையும், 7பேர் விஞ்ஞானமாணிப் (சூழல் விஞ்ஞானம்) பட்டத்தையும், 10 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 10 பேர் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், மேலும், 10 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் சிறப்பு இளமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். வியாபாரக்கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 06 பேர் செயற்திட்டமுகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒருவர் வியாபார முகாமைத்துவமாணிப் (பொது) பட்டத்தையும், 04 பேர் சந்தைப்படுத்தலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 30 பேர் கணக்கியல் மற்றும் நிதியியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 18 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 14 பேர் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து முதன்முறையாக 52 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.

இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய 56 பேர் சிறப்பு வணிகமாணிப் (வெளிவாரி) பட்டத்தையும், 26 பேர் வணிகமாணி (வெளிவாரி-3 வருடங்கள்) பட்டத்தையும், 84 பேர் வியாபார முகாமைத்துவமாணிப் (வெளிவாரி) பட்டத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும், 33 பேர் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும், 02 பேர் உடற்கல்வியில் தகைமைச் சான்றிதழையும், 05 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச்சான்றிதழையும், 20 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், மூவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 32 தங்கப்பதக்கங்களும், 10 புலமைப்பரிசில்களும், 25 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், கலைப்பீடம் மற்றும் மருத்துவபீடத்தைச் சேர்ந்த மூவரும், பல்கலைக்கழக மட்டத்தில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்களும், அவர்கள் சார்பில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களும், ஏனையவர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றது.பட்டமளிப்பு நிகழ்வுகளை நேரலையாக பல்கலைக்கழகத்தின் யூரியூப் மற்றும் முகப்புத்தகப் பக்கங்களினூடாகவும், பல்கலைக் கழகத்தின் இணையத்தளம் வாயிலாகவும் கண்டுகளிக்க முடியும்.

இப்பட்டமளிப்பு வைபவம் வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது என்றுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இப் பட்டமளிப்பு விழா இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.