;
Athirady Tamil News

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் சீனா – பிரித்தானியாவுக்கே இந்த நிலையா..!

0

சீனா சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வல்லரசாக மாறுகிறது. இதனால், அனைத்து நாடுகளும் சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற ஒரு சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது பிரித்தானியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், சீனாவால் ஏற்பட வாய்ப்புள்ள உளவுத்துறை அச்சுறுத்தல் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

சீன அரசு அல்லது அரசு சாராத நிறுவனங்களால் உளவு பார்க்கப்படும் அபாயம் இருப்பதாகவும், சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க பிரித்தானியா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய உளவு கருவியைச் சீனா வைத்துள்ளது. இது பிரித்தானிய புலனாய்வு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஏனென்றால் சீன அரசுக்குச் சொந்தமான மற்றும் அரசு சாராத நிறுவனங்கள், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்கள், அவ்வளவு ஏன் சாதாரண சீன பொது மக்கள் கூட வெளிநாடுகளில் உளவு மற்றும் குறுக்கீடு நடவடிக்கைகளில், சொந்த விருப்பத்தின் பெயரிலோ அல்லது விருப்பமில்லாமலோ ஒத்துழைக்க வேண்டும் என்பதே அந்நாட்டின் விதியாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் என்றால் அதன் பொருளாதார வலிமையால் முக்கிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவது எனப் பல வகையில் தேசிய பாதுகாப்பில் சீனா தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் சீனா ஊடுருவியுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை எந்தவொரு பெரிய கட்டுப்பாடும் இல்லாமல் சீனா பெருந்தொகையை முதலீடு செய்தே வந்துள்ளது.

இது பொருளாதார அளவில் மட்டும் நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறும் ஆபத்து இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக, சீனாவின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும் நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றக் குழு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றால் அது சீனா தான். கடந்த 30, 40 நாடுகளில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்ற நிலையில் இருந்து சக்திமிக்க பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற நிலையைச் சீனா எட்டிப்பிடித்துள்ளது.

இப்படி மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா உலகின் மற்ற நாடுகளிலும் பெருந்தொகையை முதலீடு செய்து வருகிறது.

ஏதோ பின்தங்கிய நாடுகளில் முதலீடு செய்கிறது என நினைக்காதீர்கள். சீனாவின் முதலீடுகளைக் கேட்டால் தலையே சுற்றிவிடும்.

உலகின் முக்கிய வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் சீனா முதலீடுகளைக் கொட்டி வருகிறது.

இதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் சீனா ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவே எச்சரிக்கிறது.

தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரத்தில் சீனா மிகப் பெரிய வல்லரசாகத் தொடர்கிறது என்றும் இது பிரித்தானியாவுக்கு ஆபத்தாக மாறலாம் என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.