;
Athirady Tamil News

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டவர் மரணத்தில் திருப்பம்- காதலியின் தாயை கொன்று நாடகமாடிய தமிழக டிரைவர்!!

0

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது மகன் பாபு, அவரை அங்கிருந்து மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்தார். தனது தாய், அறையில் இருந்த மரக்கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக போலீசில் பாபு தெரிவித்தார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமித்ராவை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்களது வீட்டில் சுமித்ராவின் மகளுடன் முருகன்(42) என்பவர் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்த விவகாரம் தெரியவந்தது. திருவண்ணாமலையை சேர்ந்த அவருக்கு, வளைகுடா நாட்டில் டிரைவராக வேலை பார்த்த போது அங்கிருந்த இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கேரளாவுக்கு திரும்பிவந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகன், இந்திராவின் குழந்தைகள், சகோதரர் பாபு மற்றும் தாய் சுமித்ரா ஆகியோருடன் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தி ருக்கிறார். இதனால் அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும், சுமித்ரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சுமித்ராவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மகள் இந்திராவுடன் லிவ்-இன் பார்ட்னராக முருகன் வாழ்வது சுமித்ராவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் சுமித்ரா மற்றும் முருகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது. இதனால் சுமித்ராவை கொல்ல முருகன் திட்டமிட்டார். சுமித்ராவின் மகன் பாபு இல்லாத நேரத்தில் அவரை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாபு வெளியே சென்றிருந்த நேரத்தில், சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்பு சுமித்ரா தவறி விழுந்து காயமடைந்தது போன்று செட்-அப் செய்துவிட்டு, சென்றிருக்கிறார். சுமித்ராவின் சாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாதது போன்று வழக்கம்போல் நடமாடிய படி இருந்திருக்கிறார். ஆனால் போலீசார் நடத்திய துரித விசாரணை காரணமாக முருகன் சிக்கிக்கொண்டார். கைது செயயப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.