;
Athirady Tamil News

செல்போனில் ‘ChatGPT’ செயலியை நிறுவுவது எப்படி? நமக்காக என்னவெல்லாம் செய்யும்?!!

0

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இந்த செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் தற்போது கிடைக்கப் பெறுவதாக Open AI நிறுவனம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வரும் வாரங்களில் இந்த பதிப்பு மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் பயன்பாட்டாளர்களின் வசதிக்காக, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் சாட் ஜிபிடி செயலி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டு, இந்த செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து, செல்ஃபோனில் நிறுவ வசதியாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் இச்செயலி செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) முதல் கிடைக்கப் பெறுகிறது.

ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சாட் ஜிபிடியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சாட் ஜிபிடி செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் அவர்கள், தங்கள் மொபைலில் ப்ளே ஸ்டோருக்கு சென்று அதில் ChatGPT என்று தட்டச்சு செய்ய வேண்டும். அடுத்த சில நொடிகளில் மொபைல் திரையில் Chat GPT என்று தோன்றும். உடனே அதன் இலச்சினை (Logo) மீது கிளிக் செய்ய, ஒருவரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில் சாட் ஜிபிடி பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

இதற்கான இலச்சினையின் வலதுபுறம் Chat GPT என்றும், அதற்குக் கீழே OpenAI எனவும் எழுதப்பட்டிருக்கும். இப்படி தோன்றினால் அது உண்மையான செயலி தான்.

இந்த அம்சத்தை உறுதி செய்த பின், நிறுவுதல் வசதியை (Install Option) பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Chat GPT யை நிறுவிக் கொள்ளலாம். அதன்பின் ஜிமெயில் மின்னஞ்சல் வசதியுடன் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

மார்ஷ்மெல்லோ எனப்படும் 6.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளை கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டும் சாட் ஜிபிடி செயலியைப் பயன்படுத்த இயலும். இதற்கு முந்தைய இயங்குதளப் பதிப்புகளைக் கொண்ட மொபைல்ஃபோன்களில் சாட் ஜிபிடி வேலை செய்யாது. செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே முக்கியமான இந்த தகவல் அளிக்கப்பட்டிருக்கும்.

சாட்ஜிபிடி செயலி, பயனர்கள் குறித்த பல்வேறு தரவுகளை சேகரிக்கும் திறன் படைத்தது என்று இதை வடிவமைத்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்களின் இருப்பிடத்தையும் இதனால் கண்டறிய இயலும்.

மேலும் பெயர், இருப்பிட முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும் இச்செயலி கேட்டு பெறுகிறது.

இருப்பினும், பயனர்களின் இந்தத் தகவல்கள் பிற நிறுவனங்களுடன் ஒருபோதும் பகிரப்படாது என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், தங்களை பற்றிய தரவுகளை செயலியில் இருந்து நீக்க பயனாளர்கள் விரும்பினால் அவர்கள் அவ்வாறே செய்யலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் சாட்போட்(ChatBot) எனப்படும் கணினி மென்பொருள் மூலம் இயங்கும் செயலியாகும். இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன், மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத இயலும்.

‘Generative Pre- Trained Transformer’ என்பதன் சுருக்கமே GPT. ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக இணையதளத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களை தொகுக்கும் திறன் கொண்டதாக இந்த செயலி உள்ளது.

பயனாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினாலோ, ஒரு செயலை மேற்கொள்ள உத்தரவிட்டாலோ, அதுதொடர்பாக இணையத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு பதிலளிப்பது மட்டுமின்றி, பயனர்களால் கோரப்படும் குறிப்பிட்ட செயல்களையும் இது மேற்கொள்கிறது.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட கேள்வி தொடர்பாக போதுமான தகவல் இணையத்தில் இல்லாவிட்டாலும், அந்த தகவல்கள் சாட்ஜிபிடிக்கு கிடைக்கப் பெறாவிட்டாலும், அக்கேள்வி அல்லது கட்டளைக்கு நிறைவான பதில் கிடைக்கப் பெறாமலும் போகலாம்.

சாட்ஜிபிடியில் வழக்கமான தட்டச்சு செய்து ஒரு தகவலை தேடும் வசதியுடன், குரல் பதிவு தேடல் வசதியும் உள்ளது.
இதில் வேறென்ன வசதிகள்?

சாட்ஜிபிடி செயலியில் வழக்கமான தட்டச்சு செய்து ஒரு தகவலை தேடும் வசதியுடன், குரல் பதிவு தேடல் வசதியும் உள்ளது. இவற்றுடன், ஒரு உரையாடலின் முந்தைய பதிவை பார்க்கும் வசதியும், தரவுகளை பதிவேற்றம் செய்யும் வாய்ப்பும் இதில் உள்ளது.

கூகுள் தேடலுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியை, ஒரு தலைப்பைப் பற்றிய உள்ளடக்கத்தை பெறுவதற்கும் பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். கணினி குறியீடுகளை எழுதுவதிலும் பயனாளர்களுக்கு இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.

இருப்பினும் ஐஃபோன்களில் பிளக் -இன் எனப்படும் பிரத்யேக மென்பொருள் வசதியுடன், சாட் ஜிபிடி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சாட் ஜிபிடி செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பயனர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும் என்று Open AI நிறுவனம் கூறியுள்ளது.

பயனர்கள் தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சாட்ஜிபிடியின் மூலம் உடனடியாக பதில்களை மட்டுமின்றி, பொருத்தமான ஆலோசனைகளையும் பெற முடியும்.

அத்துடன், படைப்பாற்றலுக்கான தூண்டுதல், பல்வேறு தொழில்முறை தொடர்பான உள்ளீட்டு தகவல்கள், பல்வேறு விஷயங்கள் குறித்த கற்றலுக்கான வாய்ப்புகளையும் சாட் ஜிபிடி மூலம் பெறலாம் என்று Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.